Published : 13 Oct 2017 09:30 AM
Last Updated : 13 Oct 2017 09:30 AM
‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து வழங்க நேர்காணல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை மறைமுகமாக நடந்து வந்த ‘மூத்த வழக்கறிஞர்’ தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு ‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து கிடைப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இந்த அந்தஸ்து பெறும் வழக்கறிஞர்கள் சிறப்பு உடை அணியவும் அனுமதி அளிக்கப்படுகிறது. மூத்த நீதிபதிகள் ரகசியமாக இந்த அந்தஸ்தை வழங்கி வந்தனர். இந்த நடைமுறையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கடந்த சுதந்திர தினம் முதல் தனது மூத்த வழக்கறிஞர் உடையை தவிர்த்து வருகிறார். மூத்த வழக்கறிஞர் தேர்வு முறையில் பாரபட்சம் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த நடைமுறைக்கு எதிராக பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.
இம்மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ரோஹின்டன் எப்.நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்திரா ஜெய்சிங் வாதிடும்போது, ‘‘மூத்த வழக்கறிஞர் தேர்வு முறை பாரபட்சமாக உள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அமெரிக்காவில் சீனியர், ஜூனியர் என்ற நடைமுறை இல்லை. இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது’’ என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில், ‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து என்பது அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-ஐ மீறவில்லை’ என்று வாதிடப்பட்டது.
தனிச் செயலகம்
இருதரப்பையும் கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து வழங்க தனிச் செயலகம் உருவாக்கப்படும். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களாக இருந்தால் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதி ஒருவர், வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி மற்றும் அட்டர்னி ஜெனரல் அடங்கிய குழு தகுதியுடையவர்களை தேர்வு செய்யும். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களாக இருந்தால், இக்குழுவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அட்டர்னி ஜெனரலுக்கு பதிலாக அட்வகேட் ஜெனரல் இடம்பெறுவார். அவர்கள் தகுதியுடைய வழக்கறிஞர்கள் பட்டியலை தயாரித்து இணையதளத்தில் வெளியிடுவார்கள். அதில் ஆட்சேபணை தெரிவிக்கலாம். 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும். வழக்கறிஞராக பணியாற்றிய ஆண்டுகள் - 20 மதிப்பெண், பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் ஆஜராகி தீர்ப்பு பெற்றது - 40 மதிப்பெண், சட்ட பிரசுரங்கள் - 15 மதிப்பெண், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்கான தகுதி, நேர்காணல் - 25 மதிப்பெண் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்துக்கு பரிந்துரை செய்யப்படுவர். இந்த பரிந்துரை அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக வைக்கப்படும். ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் நீதிபதிகள் முடிவு எடுப்பார்கள். பின்னர், ‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து வழங்கப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் ரகசியமாக நடந்து வந்த ‘மூத்த வழக்கறிஞர்’ தேர்வு முறை முடிவுக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT