Published : 19 Jun 2023 02:49 PM
Last Updated : 19 Jun 2023 02:49 PM

‘குடும்பம், கட்சி, கூட்டணி’ - அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’ஃபார்முலா குறித்து மாயாவதி விமர்சனம்

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி | கோப்புப்படம்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடிக்க அகிலேஷ் யாதவ் பரிந்துரைத்துள்ள ‘பிடிஏ’ ஃபார்முலா என்பது பரிவார், தள், அலையன்ஸ் (குடும்பம்,கட்சி, கூட்டணி) என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘என்டிஏ’ (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ள ‘பிடிஏ’ என்பது இந்த கடினமான காலக்கட்டத்தில் அவர்களுக்கான ஒரு ரைமிங் தானே தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்களின் பிடிஏவின் அர்த்தம் குடும்பம், கட்சி, கூட்டணி, (பரிவார், தள், அலையன்ஸ்) அதுவும் குறிப்பிட்டக் கட்சிகளின் கூட்டணி. எனவே அவர் குறிப்பிட்டுள்ள வகுப்பு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனியார் செய்தித் தொலைக்காட்சியின் கான்க்லேவ் நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "மக்களவைக்கு அதிக எம்பிக்களை அனுப்பும் மாநிலத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணியை பிடிஏ - பிச்டே, தலித், அல்பசங்யாக் (பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், மைனாரிட்டிஸ்) கூட்டணி தோற்கடிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் வரும் 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அகிலேஷின் பிடிஏ வியூகம் கருத்து வெளிவந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி கலந்து கொள்கிறது. ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் (80 உறுப்பினர்கள்) பாஜக தலைமையிலான அணியினை தோற்கடிக்க முன்னாள் முதல்வர்களான அகிலேஷ், மாயவதி ஆகிய இரண்டு பேரும் ஓரணியில் திரண்டனர். மிகவும் பலம் வாய்ந்ததாக இந்தக் கூட்டணி கருதப்பட்ட போதிலும் அவர்களால் பாஜகவின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. அந்தத் தேர்தல் உத்தரப் பிரதேசத்தில் 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி, அதிகப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x