Published : 19 Jun 2023 01:33 PM
Last Updated : 19 Jun 2023 01:33 PM
புதுடெல்லி: இந்தியா-வியட்நாம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கமும் அளவும் மேம்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கூட்டு தொலைநோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது. இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும் அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்திற்கான பாதையை அமைக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்த வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், புதுடெல்லியில் உள்ள போர் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா - வியட்நாம் இடையே விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இரு தரப்பையும் சேர்ந்த பாதுகாப்புத் துறை உயர்மட்ட அளவிலான தொடர்பு, ராணுவ பரிமாற்றம், உயர்மட்ட அளவிலான பயணம், திறன் மேம்பாடு, பயிற்சி, ஐநா அமைதிக்கான ஒத்துழைப்பு, போர் கப்பல்களின் பயணம், இரு தரப்பு பேச்சுவார்த்தை என பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT