Published : 19 Jun 2023 05:54 AM
Last Updated : 19 Jun 2023 05:54 AM
பெங்களூரு: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்கள் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கினர். இதேபோல மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில், பெரியார் செங்கோல் மற்றும் நினைவுப் பரிசு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பெங்களூருவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக அந்த அமைப்பின் தலைவர் மனோகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் முதல்வரின் இல்லத்துக்கு சென்றனர். பெரியார் முகம் பொறிக்கப்பட்ட பித்தளையிலான 4 அடி செங்கோல், நினைவுப்பரிசு, சால்வை ஆகியவற்றை கொண்டு சென்றனர். சித்தராமையா சால்வை, பூங்கொத்து ஆகியவற்றை ஏற்பதில்லை. அதானல் சால்வைகளை போலீஸார் அனுமதிக்கவில்லை.
பின்னர் மக்கள் சமூகநீதி பேரவையினர் வரவேற்பு அறையில் காத்திருக்க வைக்கப்பட்டனர். அப்போது முதல்வர் சித்தராமையா, ‘பிரதமர் மோடிக்கு ஆதீனங்கள் செங்கோல் கொடுத்தபோது காங்கிரஸ் எதிர்த்தது. இப்போது நானே அதனை வாங்கினால் பிரச்சினையாகிவிடும். எனவே பெரியார் செங்கோலை வாங்க முடியாது. அதனை முதலில் அங்கிருந்து வெளியே கொண்டு போகச் சொல்லுங்கள்' என தனது ஊடக ஆலோசகர் பிரபாகர் மூலமாக தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சமூகநீதி பேரவையினர், ‘‘அந்த செங்கோல் மதச்சார்புடையது. இது மதச்சார்பில்லாதது'' என விளக்கம் அளித்தனர். அதனை சித்தராமையா ஏற்கவில்லை. மேலும், ‘பெரியார் செங்கோலை இல்லத்தின் நுழைவாயிலுக்கு வெளியே கொண்டுபோக சொல்லுங்கள்' என உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் பெரியார் செங்கோல் வைத்திருந்த பெண் நிர்வாகியை வெளியே அனுப்பினர்.
சுமார் 1.30 மணி நேர தாமதத்துக்கு பின்னர் சித்தராமையா மக்கள் சமூகநீதி பேரவையினரை 10 நிமிடங்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அந்த அமைப்பின் பெண் நிர்வாகி ஒருவர், ‘‘எங்கள் சாதியைச் சேர்ந்த நீங்கள் கர்நாடக முதல்வரானது பெருமையாக இருக்கிறது. நீங்கள் நிச்சயம் பிரதமராக வேண்டும்'' என கண்ணீர்மல்க தெரிவித்தார். அதனைக் கேட்ட சித்தராமையா மற்றும் அரங்கத்தில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT