Last Updated : 30 Oct, 2017 09:33 AM

 

Published : 30 Oct 2017 09:33 AM
Last Updated : 30 Oct 2017 09:33 AM

காலத்துக்கு பொருந்தாத நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும்: ‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ நிகழ்ச்சியில் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து

காலத்துக்குப் பொருந்தாத நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சட்ட ஆணைய முன்னாள் தலைவர் நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ சார்பில் 2-வது சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், இலக்கியத்துக்கும் சட்டத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து சட்ட ஆணைய முன்னாள் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியு மான ஏ.பி.ஷா உரையாற்றினார்.

புகழ்பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இருந்த இலக்கிய அறிவு, இலக்கியங்களில் நீதி நிலைநாட்டப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை அவர் விளக்கிப் பேசினார். ‘மகாபாரதம் நீதி சார்ந்தது. மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றை சுட்டிக் காட்டும் சிலப்பதிகாரம் நீதி கேட்டு நடந்த போராட்டம்தான். பல்வேறு உலக இலக்கியங்கள் நீதி சார்ந்ததே’ என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் 80 சதவீதம் இந்துக்கள் இருந்தாலும், ஒரு மதம், மொழி சார்ந்து அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்காமல் அனைவருக்கும் பொதுவான சட்டத்தையே உருவாக்கினர்.

தேச உணர்வு

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில், பேசாமல் இருக்கவும், கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான சுதந்திரமும் அடங்கியுள்ளது. திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியல்ல. தேசப்பற்று தானாக வரவேண்டும். அதைக் கட்டாயப்படுத்தி கொண்டுவர முடியாது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

மாற்றுக் கருத்துகளை ஒடுக்க நினைப்பது மாற்றுக் கருத்தாளர்களையே அழிப்பதில் போய் முடிந்துவிடும். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் சம்பவங்கள் இதற்கு உதாரணம். சமூகத்தில் வேற்றுமை இருப்பது இயற்கை. கட்டாயப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்தினால் சவக் குழியில்தான் ஒற்றுமை ஏற்படும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் நடைமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. அது தற்காலத்துக்குப் பொருந்தாது. எனவே, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை நீக்க வேண்டும்.

இவ்வாறு ஏ.பி.ஷா கூறினார்.

முன்னதாக, நீதிபதி ஏ.பி.ஷாவை ‘தி இந்து’ குழு பிரசுரங்களின் இயக்குநர் என்.ரவி அறிமுகம் செய்து வைத்தார். மற்றொரு இயக்குநர் நிர்மலா லட்சுமணன் வரவேற்றுப் பேசினார்.

இலக்கிய படைப்புகள்

‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்’ நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்திய எழுத்தாளர்களின் சிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக பிரயாக் அக்பரின் ‘லைலா’, மீனா கந்தசாமியின் ‘வென் ஐ ஹிட் யு’, அருந்ததி ராயின் ‘த மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’, அனீஸ் சலீமின் ‘த ஸ்மால் டவுன் ஸீ’, தீபக் உன்னிகிருஷ்ணனின் ‘டெம்பரரி பீப்பிள்’ ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நூல்களைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு ‘தி இந்து’ குழு பிரசுரங்களின் தலைவர் என்.ராம் நினைவுப் பரிசு வழங்கினார். இவற்றில் சிறந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் விருது வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x