Published : 06 Oct 2017 03:35 PM
Last Updated : 06 Oct 2017 03:35 PM

மரண தண்டனை நிறைவேற்றும் முறை; தூக்குக்கு மாற்று வழிகளைக் காண மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மரண தண்டனைக் கைதிகள் வலியில் உயிரை விடக்கூடாது, நிம்மதியாக உயிரை விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் முறையை ஏன் நிறுத்தக் கூடாது?” என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மரணத்தின் போது கூட ஒருவர் கவுரவமாக உயிரிழக்க உரிமை உண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அமைதியாக மரணமடைய வேண்டும் வலியில் அல்ல என்று நீதிமன்றம் அபிப்ராயம் தெரிவித்துள்ளது.

நவீன அறிவியல் சாத்தியங்களைக் கொண்டு வலியற்ற மரணம் நிகழ்வதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வழிமுறைகளைக் காண வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அடுத்த 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“குற்றவாளிகள் அமைதியான முறையில் மரணமடைய வேண்டும், வலியில் அல்ல” என்றார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

இப்படி கேட்கும் போது மரண தண்டனையின் அரசியல் சாசனத் தன்மையை கேள்விக்குட்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

“இந்திய அரசியல் சாசனம் கருணைக்கு இடமளிக்கும் ஒரு ஆவணம்தான். அது சட்டத்தின் புனிதத்தன்மையையும் நெகிழ்வுத் தன்மையையும் அங்கீகரிக்கக் கூடியதுதான் எனவே காலத்திற்கேற்றவாறு மாற்றம் செய்ய அனுமதிப்பதுதான்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயிர் வாழ்வது மற்றும் கவுரவத்திற்கான அடிப்படை உரிமையை எப்படி அரசியல் சாசனம் 21-ம் பிரிவு புனிதமாகக் கருதுகிறதோ, அதே போல் கவுரவமாக மரணித்தல் என்பதையும் கருத இடமுண்டு என்கிறது நீதிமன்றம்.

டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா மேற்கொண்ட ரிட் மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்தப் பரிசீலனைகளை மேற்கொண்டது. அவர் தன் மனுவில், “ஒரு மனிதனைத் தூக்கிலிட்டுக் கொல்லும் போது அவரது கவுரவம் முற்றிலும் அழிந்து போகிறது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x