Published : 08 Oct 2017 10:40 AM
Last Updated : 08 Oct 2017 10:40 AM
இப்போதெல்லாம் தொழிலதிபர்கள் கூடும் இடங்களில் புதுவிதமாக உரையாடல்கள் தொடங்குகின்றன. ஒரு தொழிலதிபர் என்னை அந்தக் கூடத்தின் ஓரத்துக்கு அழைத்துச் சென்று, “நான் உங்களிடம் ரகசியமாக ஒன்று கேட்கலாமா?” என்றார்.
“பத்திரிகைக்காரனிடம் ரகசியம் இல்லை, நீங்கள் வெளிப்படையாகவே கேட்கலாம்” என்றேன். “அப்படியில்லை, இந்தக் கேள்வியை நான் கேட்டேன் என்று பிறருக்குத் தெரியக்கூடாது” என்று பீடிகை போட்டுவிட்டுக் கேட்டார், “இப்போது என்ன (அரசியல்) காற்று திசைமாறி அடிக்கத் தொடங்கிவிட்டதா?” என்றார். அவர் கேட்டது, பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிகிறதா என்பதை. ‘நான் அப்படி நினைக்கவில்லை’ என்று பதில் சொன்னேன்.
இப்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பாகச் சில சந்தேகங்களும் அவநம்பிக்கையும் தோன்றுகின்றன. கடந்த 6 காலாண்டுகளாக மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) குறைந்து கொண்டே வருகிறது. பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு-சேவை வரி என்று இரண்டு பேரிடிகள் பொருளாதாரத்தைத் தாக்கியுள்ளன. வேலையிழப்பும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது. ஊதியமும் உயரவில்லை.
ரிசர்வ் வங்கி அறிக்கை, அரசின் பணக் கொள்கை, ஜிடிபி மதிப்பு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, வெளிவர்த்தகப் பற்று வரவு, வட்டி வீதத்தின் உண்மையான மதிப்பு போன்ற அருஞ்சொற்பொருள்களுக்கெல்லாம் பாமர மக்களுக்கு அர்த்தம் தெரியாது, அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வேலை போனால், அல்லது தொடர்ந்து வேலை கிடைக்காமல் இருந்தால், வியாபாரத்தில் வருமானம் குறைந்தால் அவர்களைப் பாதிக்கிறது. அதைப்பற்றிப் பேசுகிறார்கள்.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல சிறுதொழில், வியாபாரத்துக்கெல்லாம் பொது சரக்கு – சேவை வரியை விதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொழில்துறை, ஏற்றுமதியாளர் உள்ளிட்ட பிரிவினருக்கு சில நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன. சிலவற்றுக்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் இனி வரிக்கணக்கை மாதாமாதம் என்றல்லாமல் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
இப்போதைய நிலையில் மக்களவைக்கு இப்போது தேர்தல் நடந்தாலும் ‘இந்தியா டுடே’ 2017 ஆகஸ்டில் கணித்தபடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 349 இடங்கள் கிடைக்கக்கூடும். அதற்கும் முன்னால் மூன்று அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 1. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து பதவிக் காலத்தில் மூன்றில் இரண்டு மடங்கு கடந்துவிட்ட நிலையிலும் அவருடைய செல்வாக்கு சரிந்துவிடவில்லை. 2. ஆனால் அது அதிகரிக்கவும் இல்லை. 3. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அரசியல் களத்தில் பெரிய மாறுதல் வராமல் இப்படியேயும் இருந்துவிடாது.
‘கம்பெனி செக்ரட்டரிகள்’ என்று அழைக்கப்படும் நிறுவனச் செயலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பிரதமரின் முகத்தில் கவலை ரேகைகள் வெளிப்படையாகத் தெரிந்தன. அரசு எதிர்பார்த்தபடி வட்டி வீதத்தைக் குறைக்காத ரிசர்வ் வங்கி, ஜிடிபி வளர்ச்சியும் எதிர்பார்த்ததைவிடக் குறையும் என்று எச்சரித்தது. கோபம், ஆவேசம், தன்னம்பிக்கை கலந்து வழக்கம்போலப் பேசினார் பிரதமர்.
தேவையில்லை என்று தானே கலைத்த பொருளாதார ஆலோசகர் குழுவை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறார் மோடி! ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் படித்த மேதாவிகளைச் சாடி வந்த மோடி இப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுர்ஜீத் பல்லாவை ஆலோசகராகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்திருக்கிறார். ‘இந்த உற்பத்தி வரிவிதிப்பு அவசியம், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி அவசியம்’ என்று மூத்த அமைச்சர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தபோதே வரி குறைக்கப்பட்டிருக்கிறது. ‘வாட்’ வரியிலும் 5% குறைக்குமாறு மாநில நிதியமைச்சர்களுக்குக் கடிதம் எழுதுவேன் என்று அறிவித்தார் நிதியமைச்சர். அரசு கலக்கமடைந்திருப்பதையே இந்த மூன்று செயல்களும் உணர்த்துகின்றன. தசரா பண்டிகையையொட்டி கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வர்த்தகர்களின் சிரமம், பொருளாதாரத் துயரங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஆர்எஸ்எஸ் இப்படிக் கவலைப்படுவது வழக்கமில்லை.
இவ்வளவுக்கும் இடையில் பாஜக கூட்டணிக்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தருவது எதிர்க்கட்சிகளின் இன்றைய நிலைதான்! பிரதமர் மோடிக்கு நிகரான ஆற்றல், செல்வாக்கு, பேச்சுத் திறமை உள்ள ஒருவர் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. ஆனால் மக்களுடைய கோபம் அளவு கடந்தால் எவ்வளவு பிரபலமான தலைவராக இருந்தாலும் தேர்தலில் மண்ணைக் கவ்வ நேரும் என்பதை ராஜீவ் காந்தியின் தோல்வி நினைவுபடுத்துகிறது. மோடியைவிட அதிக வலு மக்களவையில் அவருக்கு இருந்தது.
சமூகவலை தளங்களில் மோடிக்கு எதிராக கேலியும் கிண்டலும் அதிகரித்து வருகின்றன. மீம்ஸ்களுக்குக் கணக்கே இல்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில்லாமல் பிரிந்திருந்தாலும் சமூக வலைதள தாக்குதல்களில் இறங்கிவிட்டன. ஒரு காலத்தில் காங்கிரஸையும் அதன் தோழமைக் கட்சிகளின் வாதங்களையும் பாஜக தவிடுபொடியாக்கியது. இப்போது விமர்சனங்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஆஆக இதில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸும் இப்போது இதைக் கற்றுத் தேறிவிட்டது. இடதுசாரி சுதந்திரச் சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
பிரதமர் மோடி இந்த வாரம் சிறப்பாகப் பேசியிருக்கிறார். ஆனால் நாடு நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் பேச்சுத்திறமை மட்டும் கரைசேர்த்துவிடாது. அரசு நிர்வாகத்தில் முழு அக்கறை தேவை. முக்கியமான சில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களும் நெருங்குகின்றன. வெற்றி ஓட்டத்தை பராமரிக்காவிட்டால் சறுக்கல் நிச்சயம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தது என்ற புள்ளிவிவரம் வாக்காளர்களை திருப்திப்படுத்தாது, பாஜக ஆட்சியில் என்ன சாதிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரிண்ட்’ தலைவர்
முதன்மை ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT