Published : 17 Jun 2023 02:44 PM
Last Updated : 17 Jun 2023 02:44 PM

‘மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் முக்கியம்; ஆனால்..’ - நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து சஞ்சய் ரவுத் கருத்து

சஞ்சய் ரவுத் | கோப்புப்படம்

புதுடெல்லி: "மற்ற பிரதமர்களின் பங்களிப்பைக் காட்டவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரினை மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை" என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

டெல்லி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மத்திய அரசு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று மாற்றியுள்ளது. இதுகுறித்து சிவ சேனா உத்தவ் தாக்கரே அணி சிவ சேனா எம்பி சஞ்சய் ரவுத் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் காட்டப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அருங்காட்சியகத்திற்குள் ஒரு பிரிவை உருவாக்கி பிற பிரதமர்களின் பங்களிப்பை காட்சிப்படுத்தலாம். அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிரதம மந்திரிகள் அருங்காட்சியகத்திற்கு பண்டிட் நேருவின் பெயர் மீண்டும் வைக்கப்பட வேண்டும். ஜவகர்லால் நேரு நமது முதல் பிரதமர், நாட்டுக்கு அவர் நிறைய பங்களிப்பைச் செய்திருக்கிறார். இதன்மூலம் அவர்கள் வரலாற்றை அழிக்க முயல்கிறார்கள் வேறொன்றுமில்லை" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுரவ் வல்லபாய் கூறுகையில்,"பலகையில் இருந்து நேருவின் பெயரை நீக்கிவிட்டால் நேருவின் ஆளுமையை சிறுமைப்படுத்திவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் நேருவை நவீன இந்தியாவின் சிற்பி என்று கருதுகிறார்கள். நான் மோடி ஜிக்கு, வாஜ்பாய் ஜியின் ‘சோட்டே மான் சே கொயி படா நஹி பன் பயிக’என்ற வாசத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் உங்களின் சிறுமைத்தனத்தை நாட்டு மக்களுக்கு காட்டுகிறீர்கள்.நீங்கள் பெயர்ப்பலகையில் இருந்து நேருவின் பெயரை நீக்கி விட முடியும். ஆனால் மக்கள் மனதில் இருந்து எவ்வாறு அவரின் பெயரை நீக்குவீர்கள்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

முன்னதாக, மத்திய கலாச்சார அமைச்சகம் வெள்ளிக்கிழை அறிக்கை ஒன்றில்,"நேரு நினைவு அருகாங்சியகம் மற்றும் நூலகம் (என்எம்எம்எல்) பெயரை பிதமமந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. என்எம்எம்எல் சங்கத்தின் துணைத் தலைவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தத்திட்டம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் நடந்த என்எம்எம்எல் செயற்குழுவின் 162 வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, பிரதான்மந்திரி சங்கராலயா 2022-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்க அரசு சார்பில் அழைப்பு விடுத்திருந்த போதும், நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என மூன்று பேர் பிரதமர்களாக பணியாற்றியுள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நேரு அருங்காட்சியத்தில், நேருவின் வாழ்க்கை வரலாறும் நாட்டிற்கான அவரது பங்களிப்பும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில், நமது பிரதமர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டினை எவ்வாறு வளர்ச்சி பாதையில் வழிநடத்தினார்கள் என்ற கதையின் எடுத்துரைக்கும். இது அனைத்து பிரதமர்களையும் அங்கீகரிக்கிறது. இந்த நினைவகத்தை ஜனநாயகப்படுத்துகிறது" என்று தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் எதிர்ப்பு: மத்திய அரசின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,"இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்- ன் சிறுமையையும் சர்வாதிகாரத்தையும் காட்டுகிறது" என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறுகையில்,"அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல், அதன் பெயர் மோடி. பாதுகாப்பின்மை எண்ணம் காரணமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர்" என்று தெரிவித்திருந்தார்.

பாஜக பதிலடி: காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"காங்கிரஸ் பரம்பரையைத் தாண்டி பிற தலைவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்ற சின்ன உண்மையினை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு சிறந்த உதாரணம் இது. பிரதமமந்திரி சங்ராலயாவில் ஒவ்வொரு பிரதமரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். பண்டிதர் ஜவகர்லால் நேரு குறித்த பிரிவு மாற்றப்படவில்லை. மாறாக அதன் கவுரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட ஒரு கட்சியின் அற்பத்தனம் மிகவும் வேதனையானது. மக்கள் அவர்களை நிராகரித்தற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை, ஒரு கட்சியின் பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காக மற்ற முந்தைய பிரதமர்களின் பங்களிப்பினை மறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x