Published : 11 Oct 2017 12:18 PM
Last Updated : 11 Oct 2017 12:18 PM
மனைவி மைனர் பெண்ணாக அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றால் அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 375-ல் சர்ச்சைக்குரிய உட்பிரிவு 2- ஆனது, ஒரு ஆண் தனது மனைவிக்கு 15-வயது ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்ள அனுமதிக்கிறது.
ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமான போஸ்கோ (POCSO) 18 வயது கீழ் உள்ள அனைவரையும் குழந்தைகள் எனக் குறிப்பிடுகிறது.
அப்படி இருக்கும்போது சட்டப்பிரிவு ஐபிசி 375 (2) 15 வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன் ஒரு கணவர் உறவு கொள்வதை அனுமதித்தால் அது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் மைனர்களுக்கு சட்டத்தில் சமத்துவம் அளிக்காத நிலையை உருவாக்கும் என்றும் 'இண்டிபெண்டன்ட் தாட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் அவரது கணவரே பாலுறவு கொண்டாலும் அது பலாத்காரமே என்று 'இண்டிபெண்டன்ட் தாட்' தொண்டு நிறுவனம் முன்வைத்த வாதத்தை, விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து, மனைவி மைனர் பெண்ணாக அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றால் அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஓராண்டுக்குள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசுக்கு சில கேள்விகள்:
மனைவி மைனராக இருந்தால் அவருடன் கணவர் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகது என சட்டத்தில் ஒரு விதிவிலக்கை அரசு ஏற்படுத்தியது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினவினர்.
மேலும், பிற விவகாரங்களில் முடிவெடுக்க 18-வயதே சரியான வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கணவருடன் பாலுறவு கொள்வதில் மட்டும் ஏன் இத்தகைய விதிவிலக்கு அனுமதிக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் வினவினர்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சட்டங்கள் இருந்தும் அத்தகைய திருமணங்கள் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. 70 ஆண்டுகளாகியும் சட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்த முடியாதது வருத்தத்துக்குரியது என்றும் நீதிபதிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT