Published : 16 Jun 2023 09:50 AM
Last Updated : 16 Jun 2023 09:50 AM
அகமதாபாத்: அரபிக் கடலில் உருவான அதிதீவிர புயலான பிப்பர்ஜாய் குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி இடையே நேற்று நள்ளிரவு கரையைக் கடந்தது. இந்நிலையில் புயலால் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிப்பர்ஜாய் புயல் குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி இடையே நேற்று நள்ளிரவு கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 125 கிமீ எனவும், சில பகுதிகளில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொஹபத்ரா தெரிவித்தார். இதனால் குஜராத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
புயலின் போது வீசிய பலத்த காற்றினால் மின்சாரக் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் சுமார் 940-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மின்சார இணைப்பின்றி தவித்து வருகின்றனர்.
மேலும், இந்தப் புயலினால் பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட வந்த தந்தை மற்றும் மகன் என இருவர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது தவிர, 23 விலங்குகளும் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடலோர மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதே போல வீடு, கார் போன்றவையும் புயலில் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளத்தால் மாண்ட்வி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனையும் நீர் சூழ்ந்துள்ளது. அந்த மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.
பிப்பர்ஜாய் புயல் தற்போது வடகிழக்கு நோக்கி ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து பாலைவனத்தை அடையும் நேரத்தில் வலுவிழந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என்றும், இதே நேரத்தில் ராஜஸ்தானில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT