Published : 16 Jun 2023 08:15 AM
Last Updated : 16 Jun 2023 08:15 AM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இரு எப்ஐஆர் பதிவு செய்தனர். இதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.
இதை கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7-ம் தேதி போராட்டம் நடத்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வீராங்கனைகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அப்போது அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது ஜூன் 15-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அனுராக் தாக்குர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு 180-க்கும் மேற்பட்டோரை விசாரித்ததுடன், கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஜண் சரண் சிங்கின் இல்லத்துக்குச் சென்று அவரின் உறவினர்கள், மல்யுத்த சம்மேளனத்தின் பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோரது வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸாரின் பிஆர்ஓ சுமன் நல்வா கூறும் போது, “மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லை. சிறுமி மற்றும் அவரது தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளோம். இதனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.
காவல் துறையினர், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ள அறிக்கை தொடர்பான விசாரணை ஜூலை 4-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம், காவல்துறையின் அறிக்கையை ஏற்க வேண்டுமா அல்லது மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் (போக்சோ) குற்றத்தின் தன்மையை பொறுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தீபக் குமார் முன்னிலையில் ஜூன் 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அரசு வழக்கறிஞர் அதுல் வஸ்தவா நீதிமன்றத்திற்கு வெளியே கூறும் போது, “இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354 டி (பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT