Published : 15 Jun 2023 06:41 PM
Last Updated : 15 Jun 2023 06:41 PM
புதுடெல்லி: சீன எல்லையை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
லடாக்கில் சீன எல்லையை ஒட்டிய பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பில் நேரிட்ட உயிரிழப்பு குறித்த தகவல் தொடக்கத்தில் வெளியிடப்படவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட தகவலில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகம் என பரவலாக நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டை பாதுகாக்கும் பணியில் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்த் தியாகம் செய்த துணிச்சல்மிகு வீரர்களுக்கு நாம் தற்போது அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் துணிவு, சாகசம், தியாகம் ஆகியவை வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விடுத்துள்ள செய்தியில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலைமை மாறாமல் பார்த்துக்கொள்ளாததற்கு மோடி அரசே பொறுப்பு. 65 கண்காணிப்பு முனைகளில் நாம் 26 முனைகளை இழந்துவிட்டோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப நாங்கள் பல முறை முயன்றோம். ஆனால், மோடி அரசு மக்களுக்கு உண்மை தெரியக் கூடாது என கருதுகிறது.
கல்வான் விவகாரத்தில் சீனாவுக்கு பிரதமர் மோடி தெரிவித்த பாராட்டுதான் இதற்குக் காரணம். பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டின் ஒற்றுமைக்காகவும், சீனாவின் விரிவாக்கக் கொள்கைக்கு எதிராகவும் தொடர்ந்து உண்மையை வெளிப்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் 3-ம் ஆண்டை முன்னிட்டு லே பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். வடக்குப் பிராந்திய தளபதி லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மற்றொரு லெப்டினென்ட் ஜெனரல் ரஷிம் பாலி உள்பட உயரதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில், சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT