Published : 15 Jun 2023 05:33 PM
Last Updated : 15 Jun 2023 05:33 PM
புதுடெல்லி: பாடநூல் மேம்பாட்டுக்குழுவில் அங்கம் வகித்து வரும் 33 கல்வியாளர்கள், பாடப் புத்தகங்களில் இருந்து தங்களின் பெயர்களை நீக்கக் கோரி என்சிஆர்டி-க்கு கடிதம் எழுதி உள்ளனர்.அதில் தங்களுடைய கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இயக்குநர் தினேஷ் சக்லானிக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "மூல புத்தகத்தில் இருந்து தற்போது உள்ள புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள், அப்புத்தகங்களை வேறு ஒன்றாக உருவாக்கிக் காட்டுகின்றன. இதனால் அவைகள் நாங்கள் உருவாக்கிய புத்தகம் என்று கூறுவதும் அவற்றை எங்களின் பெயருடன் இணைப்பது கடினம் என்றும் நாங்கள் உணருகிறோம். எங்களுடைய ஆக்கபூர்வமான கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
அந்தப் பாட புத்தகங்கள் பல்வேறு பின்புலம் மற்றும் கருத்தியல்களில் அரசியல் விஞ்ஞானிகளின் விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புகளினால் உருவாக்கப்பட்டது. அவை இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயக செயல்பாடு மற்றும் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களுடன் சர்வதேச வளர்ச்சி மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய கோட்பாடு அறிவினை வழங்குவதை நோக்கமாக கொண்டவை" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்தக் கடிதத்தில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் துணை டீனும், ஜவகர்லால் நேரு பல்கலை.யின் முன்னாள் பேராசிரியருமான பிரசாத் பாஜ்பாய், அசோகா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் பிரதாப் பனு மேதா, சிஎஸ்டிஎஸ்-ன் முன்னாள் இயக்குநர் ராஜீவ் பார்கவா, ஜவகர்லால் நேரு பல்கலை.யின் முன்னாள் பேராசிரியர் நிராஜா கோபால் ஜெயல், ஜவகர்லால் நேரு பல்கலை. பேராசிரியர் நிவேதிதா மேனனன், சிவில் சொசைட்டி வாட்ச் டாக் காமன் காஸ் தலைவர் விபுல் முட்கல், தற்போது கீதம் பல்கலை.யில் பணிபுரிவரும் ஹைதராபாத் பல்கலை.முன்னாள் பேராசிரியரான கே.சி. சூரி, இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடிஸ் முன்னாள் இயக்குநர் பீட்டர் ரோனால்ட் டிஸோசா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த வாரத்தில் அரசியல் விஞ்ஞானிகள் யோகேந்திர யாதவ் மற்றம் சுகாஸ் பால்ஷிகர் ஆகியோர் என்சிஆர்டி-க்கு கடிதம் எழுதி இருந்தனர். அதில் "அறிவு வளர்ச்சிக்கான பயிற்சிகள் முடக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படமுடியாத அளவுக்கு, கல்வி ரீதியாக செயல்படாத வகையில் புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளது. முன்பு அவர்களுக்கு பெருமையை ஏற்படுத்திய பாடப் புத்தகங்கள் தற்போது சங்கடத்திற்கான ஆதாரமாக மாறியிருக்கின்றன" என்று கூறியிருந்தனர்.
இந்தநிலையில், பள்ளி அளவிலான பாடப்புத்தகங்கள் அறிவு மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் புரிதல்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. எந்த நிலையிலும் தனிப்பட்ட ஒருவர் அதற்கு உரிமை கோர முடியாது என்று என்சிஆர்டி தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில், என்சிஆர்டி பாடப் புத்தகங்களில் இருந்து பல்வேறு பாடங்கள் மற்றும் பகுதிகள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து "பாஜக தலைமையிலான மத்திய அரசு உள்நோக்கத்துடன் அனைத்தும் மாற்றுகின்றது" என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அறிவு வளர்ச்சிக்கான ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டாலும் சில சர்ச்சைக்குரிய பகுதிகளின் நீக்கம் பற்றி குறிப்பிடப்படாதது பிரச்சினைக்கு வழிவகுத்தது.
இது குறித்து நீக்கப்பட்ட பாடங்கள் மற்றும் பகுதிகள் நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய மேற்பார்வையிலேயே நீக்கப்பட்டுள்ளன என்று என்சிஆர்டி விளக்கம் அளித்திருந்தது. மேலும், 2024-ம் ஆண்ட தேசிய கல்விக்கொள்கை தொடக்கம் பெற்றதும் பாடப் புத்தகங்களில் மறுசீரமைப்பு செய்வது அவசியம் என்று கூறியது. இருந்தாலும் உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சிறிய அளவிலான மாற்றங்களைக் குறிப்பிடவேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...