Published : 15 Jun 2023 01:44 PM
Last Updated : 15 Jun 2023 01:44 PM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்த அறிக்கையில், மைனர் வீராங்கனை தந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் இந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் மீதான விசாரணையில் டெல்லி போலீஸார் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதனர். இதற்காக டெல்லியில் உள்ள ரோஸ் அவனியூ நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னதாக காலையில் மூத்த போலீஸ் அதிகாரிகள் தரப்பில், "மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களுக்கு ஜூன் 15-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதால் நாங்கள் அதனைக் கடைபிடிப்போம்.
விசாரணையின் ஒரு பகுதியாக, பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு விபரம் கேட்டு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. அந்நாடுகளில் நடந்த போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டியின் போது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டலில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் போன்றவைகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவர்களின் பதில் கிடைத்ததும் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது மைனர் மல்யுத்த வீராங்கனை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் இன்று காலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
அமைச்சர் உறுதி: முன்னதாக, ஜூன் 7-ம் தேதி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "மல்யுத்த வீரர்களுடன் நான் 6 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினேன். ஜூன் 15-ம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும், அதன் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூன் 30-ம் தேதி நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது, கடந்த மே 28-ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். வீரர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
போலீஸ் விசாரணை: இதனிடையே இந்த வழக்கினை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, இது தொடர்பாக 180 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷன் சிங்-ன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களிடமும் விசாரணை நடத்தி அதனை பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தை, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சம்பவ நிகழ்வுகள் மீண்டும் விவரித்துக் காட்டுவதற்காக டெல்லியில் உள்ள பிரிஜ் பூஷனின் அதிகாரப்பூர்வ எம்.பி. இல்லத்திற்கு டெல்லி போலீஸார் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
தீர்ப்புக்காக காத்திருங்கள்: இதற்கிடையில், ஜூன் 14ம் தேதி தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரை காத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யட்டும். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தீர்ப்பு வரும் வரை பொறுமையாக காத்திருங்கள்" என்று தெரிவித்தார்.
வீராங்கனைகள் புகாரும், போராட்டமும்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் போது நாடாளுமன்றம் நோக்கில் பேரணி செல்லவும் முயன்றனர். அதன் காரணமாக காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகினர். அவர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.
ஒத்திவைப்பு: இந்தநிலையில், ஜூன் 3ம் தேதி இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சாக்ஷி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். அதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அழைப்பின் பேரில் ஜூன் 7ம் தேதி சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜூன் 15 ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூன் 15 ம் தேதி வரை தங்களின் போராட்டத்தினை நிறுத்தி வைப்பதாக வீரர்கள் அறிவித்திருந்தனர். அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT