Published : 15 Jun 2023 11:53 AM
Last Updated : 15 Jun 2023 11:53 AM

பொது சிவில் சட்டத்தை சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப் படம்.

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22-வது சட்ட ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், பொது சிவில் சட்டத்தை சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கை விவரம்: "பொது சிவில் சட்டம் தொடர்பாக 21-வது சட்ட ஆணையம் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், 'பொது சிவில் சட்டம் தேவையானதும் அல்ல; தற்போதைய நிலையில் விரும்பதக்கதும் அல்ல' என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயல்வது, தேர்தல் தோல்விகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி. மக்களைப் பிரிக்க நினைக்கும் பாஜகவின் செயல்திட்டத்தை நியாயப்படுத்தவே இந்த கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது.

சட்ட ஆணையம் தனது முந்தைய அறிக்கையில், 'இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்டாப்படுவது அவசியம்; கொண்டாடப்பட வேண்டும். சமூகத்தின் பலவீனமான குழுக்கள் தங்களுக்கான சலுகைகளை இழக்கக்கூடாது. முரண்பாடுகளுக்குத் தீர்வு என்பது அனைத்து வேறுபாடுகளையும் நீக்குவது அல்ல. பொது சிவில் சட்டம் தேவையற்றது மற்றும் தற்போதைய நிலையில் விரும்பத்தக்கது அல்ல என்பதால், பாரபட்சமான சட்டங்களை இந்த ஆணையம் கையாள்கிறது. வேறுபாடுகளை அங்கீகரிப்பதை நோக்கி பெரும்பாலான நாடுகள் நகர்கின்றன. வேறுபாடுகள் இருப்பு பாகுபாட்டைக் குறிக்காது. வலுவான ஜனநாயகத்தையே குறிக்கும்' என்று கூறி இருந்தது" என்பதை ஜெய்ராம் ரமேஷ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x