Published : 14 Jun 2023 02:43 PM
Last Updated : 14 Jun 2023 02:43 PM

உத்தராகண்ட் ‘மகாபஞ்சாயத்து’க்கு தடை கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: உத்தரகாசியின் புரோலாவில் வகுப்புவாத பதற்றங்களுக்கு மத்தியில், இந்து அமைப்பு ஒன்றால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மகாபஞ்சாயத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தராகண்டைச் சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு ஒன்று, ஜூன் 15-ம் தேதி இந்து அமைப்பு அழைப்பு விடுத்துள்ள மகாபஞ்சாயத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்து. மேலும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய விடுமுறைக்கால பெஞ்சில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இது ஒரு நிர்வாக பிரச்சினை. சட்டம் - ஒழுங்கை நிர்வாகம்தான் கையாளுகிறது. முதலில் நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடுங்கள். மனுவை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறீர்கள். அங்கு ஓர் உயர் நீதிமன்றம் இருக்கிறது. அது உங்கள் மனுவை பரிசீலனை செய்யும்" என்றனர்.

மேலும் "உயர் நீதிமன்றத்தின் மீது ஏன் இந்த அவநம்பிக்கை? அவர்களுக்கும் அதிகாரம் உண்டு. உங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்க வேண்டும். ஏன் இந்த குறுக்கு வழி? நிர்வாகத்தின் மீது உங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லை?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, இந்த மனு ஏன் அவசர வழக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஷாருக் அலம் தெரிவிக்கையில், "வெறுப்புப் பேச்சுக்களை தடுக்கும்படி, உத்தராகண்ட் மாநிலத்துக்கு எதிராக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மகாபஞ்சாயத்து நடக்க இருக்கின்ற இடத்தை விட்டு ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியேறும்படி குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வகுப்புவாத பதற்ற சூழ்நிலையை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாநிலத்தின் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு கடிதம் எழுதியிருந்தது.மேலும், வரும் ஜூன் 15ம் தேதி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மகாபஞ்சாயத்துக்கும், பேரணிக்கும் அனுமதியளிக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னணி: கடந்த மாதத்தில் உத்தரகாசியில் சிறுமி ஒருவர் ஒரு முஸ்லிம் மற்றும் இந்து இளைஞர்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் பதற்றம் நிலவத் தொடங்கியது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், பஜ்ரங்தல், விஸ்வ ஹிந்து பரிஷத், பைரவர் சேனை உள்ளிட்ட இந்து அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கின.

‘தேவபூமி ரக்‌ஷா அபியான்’ என்ற அமைப்பு ஜூன் 15-ம் தேதி மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அந்த தேதிக்குள் முஸ்லிம்கள் அனைவரும் நகரத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி பல முஸ்லீம் குடும்பங்கள் நகரவை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, முஸ்லிம் சேவா சந்தன் என்ற அமைப்பு மாநிலத் தலைநகர் டெகராடூனில் ஜூன் 18-ம் தேதி மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. உத்தரகாசி நகர நிர்வாகத்தின் தோல்வி மற்றும் மலை நகரத்திலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே இந்த மகாபஞ்சாயத்தின் நோக்கம் என்று முஸ்லிம் சேவா சந்தன் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மகாபஞ்சாயத்து நிகழ்வுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x