Published : 14 Jun 2023 07:14 AM
Last Updated : 14 Jun 2023 07:14 AM

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் மூத்தோரை முந்தும் இளையோர்

கோப்புப்படம்

யுபிஎஸ்சி குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் 28-ம் தேதி அன்று சுமார் 13 லட்சம் பேர் எழுதிய தேர்வுக்கு, எதிர்பார்த்தது போலவே 15 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி செயல்படுவதில் யுபிஎஸ்சி எப்போதுமே தொழில்முறை நிபுணத்துவத்தைக் காட்டி வருகிறது. நிச்சயமாக, யுபிஎஸ்சி பாராட்டுக்கு உரியது.

பிற தேர்வு ஆணையங்கள், குறிப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதனை கவனத்தில் கொண்டு செயலாற்றினால் நன்றாக இருக்கும்.

முதல் நிலைத் தேர்வு முடிவுகளின் போது, தேர்ச்சி அடைந்தோரின் பதிவெண்களை மட்டுமே யுபிஎஸ்சி வெளியிடும். முதன் முறையாக, தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. வரவேற்கலாம்.

தேர்ச்சிக்கான ‘கட்-ஆஃப்; மதிப்பெண் மற்றும் வினாக்களுக்கான சரியான விடைகள், இன்னும் சில நாட்கள் கழித்து, பிரதானப் பகுதியின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் மொத்தமாக 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்று அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் முடிவுகள் சொல்லும் ‘செய்தி’ சற்றே தெளிவாக இருக்கிறது.

தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி வாய்ப்பை இழந்த பலருடன் பேசியதில் இருந்து,தேர்ச்சிக்கான ‘கட் ஆஃப்’ மதிப்பெண் இவ்வாண்டு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே முதன்மைத் தேர்வில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வரை கூட சென்று வந்த மூத்த தேர்வர்களில் சிலர் இம்முறை, முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போயுள்ளது. அதே சமயம், முதல் வாய்ப்பிலேயே தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருப்பதாகத் தோன்றுகிறது. இதை விடவும் முக்கியமானது – முதல் நிலைத் தேர்வின் கடினமான பகுதியான பொதுப் பாடப் பிரிவில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற சிலர், திறனறித் தேர்வு எனும் தகுதித் தேர்வில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் பெறாததால், தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில் மூத்த தேர்வர்களும் அடக்கம். இது நிச்சயம் கவனிக்கத்தக்கது.

யூகிக்க முடியாத தரமான கேள்விகள் மூலம், இன்றைய இளைஞர்களை, ‘பழகிய பாதையை’ விட்டு சற்றே விலகி புதிய பார்வையில், புதிய பாதையில் பயணிக்கச் செய்தது யுபிஎஸ்சியின் குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வு. இதனால் இத்தேர்வு, கடினமாக இருந்திருக்கக் கூடும். இதனாலேயே,

மூத்த தேர்வர்களும் சற்றே திணறி உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் / அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படலாம்.

பொதுப் பாடத் தேர்வு, அனுபவத் தேர்வர்கள் முதல் அறிமுகத் தேர்வர்கள் வரை பரவலாக எல்லாருக்கும் சவாலாகவே இருந்தது. பெரும்பாலும், உண்மைத் தகவல்கள் அடிப்படையில் கேள்விகள் இருந்தன. அதாவது, ‘புரிந்து கொள்ளல்’, ‘கருத்து கூறல்’ ‘சிந்தித்து விடைகாணல்’ ஆகியவற்றை விட, குறிப்பிட்ட பாகத்தைப் படித்து, தெரிந்து இருந்தால் மட்டுமே விடை சொல்ல முடியும். எனவே, தவறான விடைகளைத் தவிர்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைந்து போனது. அதாவது கேள்வியைத் தொடர்ந்து வரும் நான்கு தெரிவுகள், எந்த விதத்திலும் ‘உதவி’ செய்யவில்லை!

தவறான விடை ஒவ்வொன்றுக்கும், அபராத மதிப்பெண் விதிக்கப்படும். எனவே, சரியான விடை தெரியாது, ஏதொவொன்றைத் தேர்வு செய்வோம் என்கிற மனநிலையில் பதில் அளித்து இருக்கக் கூடும். இதன் விளைவாக, அபராத மதிப்பெண்கள் அதிகமாகி தேர்ச்சியை பாதித்து இருக்கக் கூடும்.

தமிழ்நாட்டில் மட்டுமா.. அல்லது, நாடு முழுவதிலும் இந்தப் போக்கு நிலவுகிறதா என்பதற்கான தரவுகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. போகப்போகத் தெரியவரலாம்.

மாநகரம், நகரம், கிராமப்புறத் தேர்வர்கள் என்று இனம் பிரித்துத் தேர்ச்சியாளர்களை அடையாளம் காண்பது அநேகமாக இயலாது. எனினும், திறனறித் தேர்வில், கிராமப்புற இளைஞர்களைக் காட்டிலும், நகர மாநகரத் தேர்வர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற பொதுக் கருத்து இம்முறை பொய்யாகி உள்ளதாகவே தோன்றுகிறது.

முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த நிலையான முதன்மைத் தேர்வுக்குச் செல்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் மிக முக்கிய பகுதி – ‘பொழுதுபோக்கு மற்றும் கல்வி சாரா நடவடிக்கைகள்’. பல சமயங்களில் இதன் மீது நேர்முகத் தேர்வில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. எனவே இயன்றவரையில் தமக்கு உண்மையிலேயே நன்கு தெரிந்த, தாம் கடைப்பிடித்து வருகிற அம்சங்களைக் குறிப்பிடுதலே நல்லது.

இது தவிர, தேர்வரின் தனிப்பட்ட சில விவரங்களும் குறிப்பிட வேண்டி வரும். இது குறித்து, ஏற்கனவே தேர்ச்சி பெற்று குடிமைப் பணியில் சேர்ந்துள்ள இளம் சாதனையாளர், அல்லது நேர்முகத் தேர்வுவழிகாட்டிகள் அல்லது அனுபவம் நிறைந்த அலுவலர்களின் வழிகாட்டுதலைப் பெற்று விண்ணப்பம் நிறைவு செய்தல் பயன் உள்ளதாக இருக்கும்.

இன்னமும் இரண்டு கட்டங்கள் உள்ளன. அதன் முடிவில், 2023-ல் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டது என்கிற நற்செய்தி வரட்டும். நம்புவோம் - திடமாக, வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x