Published : 14 Jun 2023 09:02 AM
Last Updated : 14 Jun 2023 09:02 AM

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது என்ஐஏ

கோப்புப்படம்

புதுடெல்லி: இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோ காட்சிகளை தேசிய புலனாய்வு (என்ஐஏ) முகமை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவுதலைவர் அம்ரீத் பால் சிங்குக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இந்திய தூரகத்துக்கு முன்பு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த தேசியக் கொடியை ஒருவர் பறிக்க முயன்றார். சிலர் கதவுகளை காலால் எட்டி உதைத்தனர். இவர்களில் சிலர் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்தியவர்களில் மீதம் உள்ளவர்களை அடையாளம் காண, அவர்களின் வீடியோக்களை என்ஐஏ வெளியிட்டுள்ளது. அவர்களின் அடையாளம் தெரிந்தால், விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல என்ஐஏ திட்டமிட்டுள்ளது.

அடையாளம் காணப்படுபவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்து அவர்களின் பாஸ்போர்ட் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர் குடியுரிமையை ரத்து செய்ய முடியும். மேலும் அவர்களுக்கு இங்கிலாந்து அளித்துள்ள அடைக்கலத்தை ரத்து செய்யவும் வேண்டுகோள் விடுக்க முடியும். இதனால் அவர்களின் வீடியோக்கள் என்ஐஏ இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிதகவல் தெரிவிக்க 917290009373 என்ற வாட்ஸ்அப் எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக என்ஐஏ குழுவினர் லண்டன் சென்றுஸ்காட்லாந்து யார்டு போலீஸாருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அங்கிருந்து பல்வேறு சிசிடிவி கேமராக்களில் பதிவான 5 வீடியோ பதிவுகளை கொண்டு வந்துள்ளனர். அதில் சிலரது உருவம் தெளிவாக தெரிகிறது. சிலரை அடையாளம் காணமுடியவில்லை. அவர்களை கண்டறிவதற்காக இந்த வீடியோபதிவுகளை என்ஐஏ வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x