Published : 14 Jun 2023 09:24 AM
Last Updated : 14 Jun 2023 09:24 AM
திருவனந்தபுரம்: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன்-ரிலேஷன்சிப் உறவை சட்டப்படியான திருமணமாக அங்கீகரிக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இருவர் முறைப்படியாக திருமணம் செய்யாமல் லிவ்-இன்-ரிலேஷன்சிப்பில் வாழ்வதென கடந்த 2006-ல் முடிவெடுத்து வாழ்கை நடத்தி வந்தனர். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், அந்த தம்பதியினர் உறவை முறித்துக் கொள்ள விரும்பியதையடுத்து, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பரஸ்பர விவாகரத்துக்கான கூட்டு மனுவுடன் அவர்கள் குடும்பநல நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி விவாகரத்து வழங்க குடும்பநல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து, அந்த தம்பதிகள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் ஏ . முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனுதாரரின் லிவ்-இன்ரிலேஷன்சிப் உறவு இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, தனிப்பட்ட சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணம் நடந்தால் மட்டுமே அந்த உறவுக்கு சட்டத்தால் அங்கீகாரம் வழங்கப்படும்.
விவாகரத்து வழங்க முடியாது
எனவே விவாகரத்து என்பதுசட்டப்படியான திருமணத்தைப் பிரிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். லிவ்-இன் உறவுகள் மற்ற நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படலாம். ஆனால், அது விவாகரத்துக்கானதல்ல.
அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே விவாகரத்து வழங்க சட்டத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கு அதற்கு பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT