Published : 13 Jun 2023 01:47 PM
Last Updated : 13 Jun 2023 01:47 PM
புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ட்விட்டருக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அதன் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி கூறி இருப்பது உண்மையல்ல என்றும், ட்விட்டர் இந்திய சட்டங்களை மீறி இருப்பதாகவும் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஜேக் டார்ஸி கூறியிருப்பது உண்மையல்ல. என்ன காரணத்திற்காக அவர் இவ்வாறு கூறி இருந்தாலும் அது கற்பனையானதே. இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் அது உள்நாட்டு நிறுவனமோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, சிறிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ அவை இந்திய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. இந்திய குடிமக்களிடம் நீங்கள் ஒரு பொருளை விற்கிறீர்கள் எனும்போது இந்திய சட்டத்தை கடைப்பிடிப்பது கட்டாயம்.
கடந்த 2 ஆண்டுகளாக ட்விட்டர் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். ட்விட்டர் தனது சமூக ஊடக தளத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. சிலரது குரலை ஒடுக்குகிறது; சிலரது சமூக ஊடகக் கணக்குகளை முடக்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இதுபோன்ற செயல்களில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளது. ஜேக் டார்ஸியின் தாக்குதல் என்னை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அவர் உண்மைக்கு மாறாக பேசி இருக்கிறார். அவர் பேசி இருப்பது பொய்யானது; தவறானது. இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளான 14, 19, 21 ஆகியவற்றை ட்விட்டர் மீறி உள்ளது. ட்விட்டராக இருந்தாலும் வேறு எந்த சமூக வலைதளங்களாக இருந்தாலும் அவை இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடாது. இந்திய சட்டங்களை மீறக்கூடாது." இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பின்னணி: ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸி நேற்று(ஜூன் 12) 'பிரேக்கிங் பாயின்ட்ஸ்' என்ற யூடியூப் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது எந்தெந்த வெளிநாடுகளில் இருந்து என்ன மாதிரியான அழுத்தங்களை அவர் சந்திக்க நேர்ந்தது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு டார்ஸி பதில் அளித்தார்.
அதில், "டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், தங்கள் அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் தொடர்பாகவும் நிறைய முறை இந்தியா கோரிக்கைகள் விடுத்தது. அதற்கு நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தைத் தடை செய்வோம் என்றும் மிரட்டியது. ட்விட்டருக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை என்ற நிலையில் அந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி இந்தியாவில் உள்ள ட்விட்டர் ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் என்றும் எச்சரித்தது. அதை அவர்கள் செயல்படுத்தவும் செய்தனர். இதுதான் இந்தியா என்ற ஜனநாயக தேசம். துருக்கியும் இந்தியாவைப் போலத்தான் நடந்து கொண்டது" எனத் தெரிவித்திருந்தார். ஜேக் டார்ஸியின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT