Published : 13 Jun 2023 01:37 PM
Last Updated : 13 Jun 2023 01:37 PM
புதுடெல்லி: "கோவிட் தடுப்பூசி பதிவுக்காக பயன்படுத்தப்படும் அரசாங்கத்தின் ‘கோவின்’ செயலியை குறைத்து மதிப்பிட உலகில் பல சக்திகள் விரும்புகின்றன" என்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொடர்பு இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (ஜூன் 13) கூறுகையில்," கோவின் தரவு கசிவு குறித்து நேற்று (திங்கள்கிழமை) கூறப்பட்ட குற்றச்சாட்டு கூட, கோவின் செயலியின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் என்றே நான் நம்புகிறேன். நாட்டின் முதன்மையான சைபர் பாதுகாப்புகள் நிறுவனமான, சிஇஆர்டி-யை கையாண்டு வரும் ஏஜென்சி இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றைய முதற்கட்ட விசாரணையில், டெலிகிராம் பாட்-ல் வெளியான தகவல்கள் கோவின் செயலியில் இருந்து பெறப்படவில்லை. அவை போலியானவை அல்லது சில மூன்றாம் தர மூலத்தில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இங்கே கோவின் செயலியினை குறைத்து மதிப்பிடுவதற்கு சில சக்திகள் விரும்புகின்றன" என்றார்.
முன்னதாக, இந்தத் தகவல் கசிவு விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சிகள், கோவின் செயலியில் இருந்து தகவல் கசிவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கூறுகையில்,"தனது டிஜிட்டல் இந்தியா வெறியில், இந்திய அரசானது நாட்டு மக்களின் தனியுரிமைகளை மறந்துவிட்டது. கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒவ்வொரு இந்தியரின் தனிப்பட்ட தகவல்களும் பொது வெளியில் காணக்கிடைக்கின்றன. இவ்வாறு நடக்க யார் அனுமதித்தது? இந்திய அரசு எதற்காக தகவல் பாதுகாப்புச் சட்டத்தை வைத்துள்ளது? மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில்," கோவின் செயலியில் இருந்து தனியுரிமைத் தகவல்கள் கசிந்ததற்கான எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. கோவின் -ல் ஒடிபி அங்கீகார முறையிலான அணுகல் முறையிலேயே தரவுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் கோவின் செயலியில் உள்ள தரவுகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிஇஆர்டி-யின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில், டெலிகிராம் பாட்டிற்கான தரவுதளமானது கோவின் தரவுதளத்தின் ஏபிஐ-யை நேரடியாக அணுகவில்லை என்று தெரிவித்துள்ளது. சில ட்விட்டர் பயனர்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தனிப்பட்ட தரவுகள், டெலிகிராம் பாட் மூலமாக செல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT