Published : 13 Jun 2023 04:37 AM
Last Updated : 13 Jun 2023 04:37 AM
கொச்சி: கழிவறை நீரை குடிக்குமாறு எங்களை துன்புறுத்தினர் என்று நைஜீரிய கடற்படையிடம் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள்தெரிவித்தனர்.
நைஜீரிய கடற்படை பிடித்து வைத்திருந்த 3 மாலுமிகள் உட்பட 16 இந்தியர் 10 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். நைஜீரியாவில் எண்ணெய் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஹீரோயிக் ஐடுன் என்ற கப்பல் சென்றது. அதில், இந்தியாவை சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் 3 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் என மொத்தம் 26 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அந்த கப்பல் எண்ணெயை பெறுவதற்காக நைஜீரிய கப்பலுக்கு காத்திருந்தது. இதனிடையே, அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று, நைஜீரிய கடற்படையில் இருந்து வருகிறோம் என அறிவித்தபடி இந்த கப்பலை நெருங்கி உள்ளது. தங்கள் கப்பலை நோக்கி வருபவர்கள் கடற்கொள்ளையர்களாக இருக்க கூடும் என்ற அச்சத்தில் ஐடுன் கப்பல் சர்வதேச கடல் எல்லைக்குள் புகுந்தது. இதனால், எல்லை தாண்டியதாக அந்த கப்பல் நைஜீரிய கடற்படையால் பிடித்து செல்லப்பட்டது.
பின்னர் நைஜீரியாவிலிருந்து எண்ணெயை திருடியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த ஜனவரி மாதம் நைஜீரிய உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கப்பலில் வந்த 26 பேரும் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நைஜீரிய அரசுக்கு இழப்பீடு அளிப்பது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நிலையில் 10 மாதங்களுக்குப் பின்னர் 16 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் 3 மாலுமிகள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொச்சியைச் சேர்ந்த மாலுமிகள் சானு ஜோசப், வி. விஜித், கொல்லத்தைச் சேர்ந்த மில்டன் டி கவுத் ஆகிய 3 பேரும் அண்மையில் கொச்சி வந்தடைந்தனர்.
இதுகுறித்து 3 பேரும் கூறும்போது, “கடந்த 10 மாதங்களாக நைஜீரிய கடற்படையின் பிடியில்சிக்கி ஏராளமான அவஸ்தைகளை அனுபவித்தோம். எங்களை கழிவறை நீரை குடிக்குமாறு துன்புறுத்தினர். அடித்தும் துன்புறுத்தினர். எங்களை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT