Published : 13 Jun 2023 04:50 AM
Last Updated : 13 Jun 2023 04:50 AM
புதுடெல்லி: அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘பிப்பர்ஜாய்' புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரபிக்கடலில் உருவான ‘பிப்பர்ஜாய்' புயல், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
310 கி.மீ. தொலைவில்..: வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் ‘பிப்பர்ஜாய்' புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவரும் 15-ம் தேதி குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.
புயல் காரணமாக ஜூன் 14, 15-ம் தேதிகளில் குஜராத்தின் கட்ச், துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். எனவே மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் ரிஷிகேஷ் படேல், பிரபுல் பாய், கணுபாய் தேசாய், ராகவ் படேல், குவார்ஜி, முலுபாய் பெரா, ஹர்ஷ் சங்வி, ஜெகதீஷ் விஸ்வகர்மா, புருசோத்தம் சோலங்கி ஆகியோர் புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.
மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 27,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
‘பிப்பர்ஜாய்' புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் மோடி ‘‘குஜராத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய தேவையான உதவிகளை மத்திய அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும். கடலோர காவல் படை, கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மீட்பு, நிவாரண, தேடுதல் பணிகளில் ஈடுபட ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விமானப்படை மற்றும் ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவக் குழுக்கள் 24 மணி நேரமும் கட்ச், சவுராஷ்டிரா பகுதியில் முகாமிட்டிருக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
நிவாரண பணி: குஜராத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புருசோத்தம் ரூபலா, தர்சன் ஜர்டோஷ், மகேந்திர முன்ஞ்பாரா ஆகியோர் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
பாகிஸ்தானில் முன்னெச்சரிக்கை: பாகிஸ்தானின் கராச்சி நகரில்இருந்து 600 கி.மீ. தொலைவில் 'பிப்பர்ஜாய்' புயல் நிலை கொண்டுள்ளது. அந்த நகரில் 144 தடைஉத்தரவு அமல் செய்யப்பட்டி ருக்கிறது. கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT