Published : 12 Jun 2023 05:46 AM
Last Updated : 12 Jun 2023 05:46 AM
புதுடெல்லி: வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘மகாசம்பர்க் அபியான்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பேசினார்.
அப்போது பாதிப்பு, துரோகம் மற்றும் அன்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டும் உணர்ச்சிப்பூர்வமான ‘கபி அஷ்க், கபி காம்’ என்று தொடங்கும் கவிதையுடன் தனது பேச்சை தொடங்கினார்.
“சில நேரங்களில் கண்ணீரையும், சில நேரங்களில் சோகத்தையும் சில நேரங்களில் விஷத்தையும் குடிக்கிறீர்கள். அப்போதுதான் சமுதாயத்தில் வாழ முடியும். இதுதான் என் அன்புக்கு கிடைத்த வெகுமதி. என்னை துரோகி என்கிறார்கள். அதை அவப்பெயர் அல்லது புகழ் என்று அழைக்க அவர்கள் என் பெயரை எடுத்துக் கொள்கிறார்கள்” என்பது அந்த கவிதை வரிகளின் அர்த்தம்.
பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம் சாட்டி உள்ளனர் இதையடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் புகார் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை பிரிஜ்பூஷண் மறுத்து வருகிறார். இந்நிலையில்தான் இந்தப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் பூஷண் இந்தக் கவிதையை வாசித்துள்ளார்.
பின்னர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு பிரிஜ் பூஷண் பேசியதாவது: நேரு ஆட்சி நடைபெற்றபோது, பாகிஸ்தானும் சீனாவும் நமது இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்தன. அப்போது மோடி போன்ற வலிமையான ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டிருப்பார்.
நாடு முழுவதும் தரமான சாலைகள், மருத்துவக் கல்லூரிகள், ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்தது என பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, வரும் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நான் மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT