Published : 13 Oct 2017 03:55 PM
Last Updated : 13 Oct 2017 03:55 PM
ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரை விடுவித்து தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த சிபிஐ நீதிமன்றத்தின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது.
வழக்கின் முழு விவரங்களை அலசிய உயர் நீதிமன்றம், ‘சிபிஐ நீதிமன்ற நீதிபதி சம்பவம் பற்றி தன் மனக்கற்பனைக்கு உயிரூட்டம் கொடுத்துள்ளார்’ என்று விமர்சனம் வைத்தது.
ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கில் தல்வார் தம்பதியினருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக்கி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தம்பதியினரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது.
இந்த விசாரணை முடிந்து தீர்ப்பு அளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, "சிபிஐ விசாரணை நீதிமன்ற நீதிபதி திரைப்பட இயக்குநர் போல் செயல்பட்டார். வழக்கை கணிதப்புதிரை விடுவிப்பது போல் விடுவிக்க முயற்சி செய்துள்ளார்” என்று விமர்சனத்தை முன் வைத்தார்.
தம்பதியினருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.லால் மீது விமர்சனம் வைத்த உயர் நீதிமன்றம், இவர் பிறழ்வு செய்தார் என்றும் சாட்சியங்களையும் சூழ்நிலைகளையும் உத்தரவாதமாக எடுத்துக் கொண்டார் என்றும் சாடியது.
அதாவது திரைப்பட இயக்குநர் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடைத்த தரவுகளின் மீது ஒருங்கிணைப்பைத் திணித்து, உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய கருத்துக்கு எந்த வித ஒருங்கிணைப்பையும் வழங்காமல் செயல்பட்டார் சிபிஐ நீதிமன்ற நீதிபதி லால் என்று சாடியுள்ளது.
அதாவது தல்வார் தம்பதியினர், மகள் ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொலை செய்து விட்டு ஆதாரங்களை அழித்து விட்டார் என்று தவிர்க்க முடியாத வகையில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி நம்பியதாக உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிஸ்ரா (உயர் நீதிமன்ற அமர்வின் ஒரு நீதிபதி), சிபிஐ விசாரணை நீதிமன்ற நீதிபதி ‘கூடுதல் ஆர்வம் மற்றும் உற்சாகம் பீறிடவும், பாரபட்சமான குறுகிய அணுகுமுறையில் தன்னுடைய சொந்த உணர்வு மற்றும் உறுதியில் அடைந்த தன் சுய-பார்வையை மதிப்பீடுக்கும் உண்மைத் தரவுகளுக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய மனக்கற்பனைக்கு வடிவம் கொடுத்து தீர்ப்பு வழங்கியுள்ளார்’ என்று கூறினார்.
மேலும், “விசாரணை நீதிமன்ற நீதிபதி சட்டத்தின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல் கொடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு இது பொருந்துமா என்று ஆராயாமல், இதே வழக்கின் வேறுபல சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது தெரியவருகிறது.
சிபிஐ நீதிமன்ற நீதிபதி தன்னுடைய கற்பனை, உணர்வுக்கேற்ப விஷயங்களை முன் கூட்டியே தீர்மானித்துள்ளார். தவறான ஒப்புமையிலும் அனுமானத்திலும் துண்டு துண்டான ஆதாரங்களை தன் கற்பனை வளத்தினாலும் கடுமையான தர்க்க அறிவினாலும் இணைத்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளது தெரிகிறது” என்றார் நீதிபதி மிஸ்ரா.
“இந்த ஒட்டுமொத்த தீர்ப்பும் இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுத்துக்கொண்டு முன் கணிப்பான உண்மைகளை தேர்வு செய்து கற்பனையான தர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட அடிபணியாத ஒரு பிடிவாதத்தினால் அளிக்கப்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சனம் வைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி மிஸ்ரா.
கடைசியாக நீதிபதிகள் ஒரு கொலை வழக்கை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை தொகுத்துக் கொடுத்தார் நீதிபதி மிஸ்ரா, அதில், தரவுகளையும், ஆதாரங்களையும் குறுகிய மனோபாவத்துடன் அணுகக் கூடாது. ஒரு குறிப்பிட்ட வழக்கின் ஆதாரங்களை, சாட்சியங்களை அதன் முகப்பு மதிப்பின் படி விளக்கி சட்டத்தேவைகளை பூர்த்தி செய்வதான அணுகுமுறையுடன் அணுக வேண்டும்.
சாட்சிகளை விசாரணை செய்யும் போது, ஆய்வு செய்யும் போது பேரார்வ, அவசரஅடி தர்க்கம் ஒரு போதும் வழிகாட்டுதலாக இருக்கக் கூடாது. பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்களை வேறு ஒன்றுடன் ஒப்பிட்டு சுய-பார்வையின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. தீர்ப்பு நீதிபதி தனக்கென உருவாக்கிக் கொண்ட அனுமானத்தின் அடிப்படையில் அமையக்கூடாது, கற்பனைக்கு தூலமான வடிவம் கொடுக்கக் கூடாது, தீர்ப்பில் அணுகுமுறையின் வெளிப்படைத்தன்மை பிரதிபலிப்பது அவசியம் என்று கொலை வழக்கை எப்படி நீதிபதிகள் அணுக வேண்டும் என்று பாடம் எடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT