Published : 11 Jun 2023 01:33 PM
Last Updated : 11 Jun 2023 01:33 PM
பெங்களூரு: கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் கர்நாடகா முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும், சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும், பெண்களின் வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "கர்நாடகா முழுவதும் பெண்கள் சவுகரியமாக பயணிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எந்தெந்த பகுதிகளில் பேருந்து இயக்கம் குறைவாக உள்ளதோ அங்கு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக சக்தி ஸ்மார்ட் கார்டு எனும் கார்டை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார்டைப் பெற பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் இந்த கார்டை ஆவணமாகப் பயன்படுத்தி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதுவரை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டுமே இவ்வாறு இலவசமாக பயணிக்க முடியும் என்றும், இத்தகைய பேருந்துகளில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கப்படும் என்றும் கர்நாடக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த 5 முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று இந்த சக்தி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT