Published : 11 Jun 2023 03:48 AM
Last Updated : 11 Jun 2023 03:48 AM
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சற்று ஓய்ந்திருந்த நிலையில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி இன மக்கள் 53 சதவீதமும், நாகா, குகி இனத்தவர்கள் 40 சதவீதமும் உள்ளனர். இதில், மேதேயி மக்கள், பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்க்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற இன மக்கள் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. பல நாட்கள் நீடித்த இந்த மோதல், கலவரமாக மாறியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் இம்பால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி கங்போக்பி மாவட்டம் கோகென் கிராமத்துக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் குகி இனத்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், போலீஸ் மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை சீருடைகளை அணிந்திருந்ததாக கிராம மக்கள் கூறினர். மேதேயி இனத்தை சேர்ந்தவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மணிப்பூரில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி,அமைதியை ஏற்படுத்தும் விதமாகஅமைதி குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. ஆளுநர் தலைமையிலான இந்தகுழுவில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு இனத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT