Published : 05 Oct 2017 04:01 PM
Last Updated : 05 Oct 2017 04:01 PM
நிகழ்ச்சியொன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ், ''மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டு ஒரு மாதமாகிறது. அவரை கொன்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது படுகொலையை கொண்டாடுபவர்கள் யாரென்று தெரிகிறது. சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் கவுரி படுகொலையை கொண்டாடுகிறார்கள். மோடி இதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். அப்படியானால் இதை அவர் ஆதரிக்கிறாரா? அவரது மவுனம் வேதனை தருகிறது. மோடி என்னை விட பெரிய நடிகராக இருக்கிறார்'' என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சினைகள், கவுரி லங்கேஷ் படுகொலை, தான் மோடிக்கு எதிரானவரா என்பவை குறித்து விரிவாகப் பேசுகிறார்...
பிரதமர் குறித்த உங்களின் கருத்துகள் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. அதுகுறித்துப் பேசியதற்காக வருத்தப்படுகிறீர்களா?
கொடூரமான, கோழைத்தனமான வகையில் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது என்னை ஆழமாக பாதித்திருக்கிறது. மனிதத்தன்மையற்ற இந்த கொலை என்னை மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பிரதமர் மோடியைப் பின் தொடர்பவர்கள் கவுரி படுகொலையைக் கொண்டாடுகிறார்கள். அதுகுறித்த பிரதமரின் மவுனம், இந்த சுதந்திர நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக என்னைப் பாதித்தது. இதைக் கூறியது ஒரு பாவமா?
உங்களை மோடிக்கு எதிரானவர் என்று விமர்சிக்கிறார்களே...
பிரதமரின் மவுனம் வேதனை அளிக்கிறது என்று கூறினேன். இதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்காக என்னை மோடிக்கு எதிரானவன் என்று கூற எவ்வளவு தைரியம் இருக்கக்கூடும்?
நான் மோடிக்கு எதிரானவன் அல்ல. அவர் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய பிரதமர். அவரை நான் அரசியல் கட்சிக்கான தலைவராகப் பார்க்கவில்லை. அவர் மதச்சார்பற்ற நாட்டின் தலைவர். பிரதமர் மோடி நம் நாட்டையும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவம் செய்கிறார். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில விஷயங்களில் அவருடன் எனக்கு முரண்பாடு உண்டு.
நேர்மையாக இருப்பதற்கும், சுதந்திர நாட்டில் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியதற்குமான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கண்டிப்பாக சமுதாயம் என் மேல் சுமத்திய பொறுப்புகளைப் புறந்தள்ளி விட்டு ஓடமாட்டேன்.
நான் சொல்லும் வார்த்தைகளுக்கு நானே பொறுப்பாளி. அதுதான் பிரகாஷ் ராஜின் அடையாளம். என்னைக் கேலி செய்பவர்கள் யாரும் என்னை முகத்துக்கு நேராகச் சந்திக்கும் வலிமை அற்றவர்கள். விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. தேவைப்படும் இடத்தில், நேரத்தில் நான் உண்மையையே பேசுவேன். என்னுடைய வார்த்தைகளில்தான் நான் நிற்கிறேன். அதில் மறுப்புக்கு இடமே இல்லை.
உங்களைக் கேலி செய்பவர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
என்னைக் கிண்டல் செய்பவர்களை நான் ப்ளாக் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நான் ஜனநாயகத்திலும், எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இவர்களின் வாயிலாகவே நான் அறிந்துகொள்கிறேன்.
ஒரே ஒரு கேள்விதான் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. எப்படி ஒருவரின் எதிர்ப்பையோ, அபிப்ராய பேதத்தையோ ஒடுக்க ஒரு சமூகம் தீவிரமாக முயல்கிறது என்பதுதான். சமூக ஊடகங்கள் இருமுனைகளைக் கொண்ட கத்தி போன்றவை. அவற்றைக் கொண்டு நல்லதும் சாத்தியம், கெட்டதும் சாத்தியமே.
கமல்ஹாசன் அரசியலுக்கு நுழைவதாக முடிவெடுத்த சில நாட்களில் கூறப்பட்ட உங்களின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. உங்களின் பேச்சை அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?
என்னுடைய எண்ணம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் அரசியலுக்கு வர விருப்பப்பட்டால், நேரடியாக உங்களிடம் வந்து என்னுடைய நோக்கத்தைத் தெரிவிப்பேன். சமூகத்தில் பொறுப்புள்ள நடிகர்கள் கூறும் கருத்துகளைச் சரியாக புரிந்துகொள்ளும் அளவு மக்கள் இன்னும் வளர வேண்டும்.
சமூகத்தில் இன்றைய என் நிலைக்குக் காரணமான மக்களை நான் நேசிக்கிறேன். இதற்காக தெலங்கானாவில் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன். எனக்கு இவ்வளவையும் தந்த சமூகத்துக்கு இப்படித்தான் என்னால் திருப்பித் தரமுடியும். ஒரு விவசாயிக்கு உதவினேன் என்றால் அவரின் பின்புலத்தை நான் பார்ப்பதில்லை. ஏனெனில் விவசாயிகளுக்கு எந்த எல்லையும் இல்லை. நான் இந்த உலகின் குடிமகனாகவும் மனிதத் தன்மை கொண்டவனாக எதிர்வினை ஆற்றவுமே விரும்புகிறேன்.
நீங்கள் எந்தப் பெயரால் அடையாளம் காணப்பட விரும்புகிறீர்கள்? பெயரையும் புகழையும் அள்ளித்தந்த பிரகாஷ் ராஜா அல்லது உங்களின் வேரைக் குறிப்பிடும் பிரகாஷ் ராயா?
கர்நாடக மக்களுக்கு என்னை பிரகாஷ் ராயாகத் தெரியும். அது அப்படியே இருக்கட்டும். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நான் பிரகாஷ் ராஜ் என்றே அறியப்படுகிறேன். தொழில்முறை காரணங்களுக்காக மட்டுமே நடிகர்கள் திரைப் பெயரைப் பெற முயல்கின்றனர். இதற்கும் அவர்களின் அடையாளத்துக்கும், குடும்பப் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
முரளிதர கஜானே
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT