கோட்சே சர்ச்சை முதல் மல்யுத்த வீரர்கள் முக்கிய முடிவு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 10, 2023

கோட்சே சர்ச்சை முதல் மல்யுத்த வீரர்கள் முக்கிய முடிவு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 10, 2023
Updated on
3 min read

தேசிய விளையாட்டுப் போட்டி விவகாரம்: அமைச்சர் உதயநிதி விளக்கம்: “தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாதது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையாக தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் இது நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் எடுக்க முடிவு: அன்பில் மகேஸ்: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

கோட்சே குறித்த மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை: “மகாத்மா காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா?” என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். அவர் பாபர், அவுரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், அவுரங்கசீபின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க இயலாது" என்று அமைச்சர் கிரிராஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, "தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

‘வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை’: குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூசணிக்காய் உடைத்த அதிகாரி - காவல் துறை விளக்கம்: விபத்துகளை குறைக்க சாலையில் பூசணிக்காய் உடைத்த போலீஸ் தொடர்பாக வீடியோ வைரல் ஆன நிலையில், அறிவியலை மட்டுமே நம்புவதாக சென்னை காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சென்னை காவல் துறை அளித்துள்ள விளக்கத்தில், "இது ஒரு தனிப்பட்ட அதிகாரி, தனது தனிப்பட்ட நம்பிக்கையின் நீட்சியால் செய்த நல்ல நோக்கம் கொண்ட, ஆனால் முற்றிலும் தவிர்க்கக் கூடிய செயலாகும். அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையை வேறுபடுத்திப் பார்க்க ஒரு கணம் தவறிவிட்டார்" என்று தெரிவித்துள்ளது.

“பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே ஆசிய போட்டிகளில் பங்கேற்போம்”: “தற்போது நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டு ஆசிய போட்டிகளில் பங்கேற்போம்” என்று மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஒவ்வொரு நாளும் மனதளவில் நாங்கள் எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியாது" என்று கூறினார்.

முன்னதாக, பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டுக்கு டெல்லி போலீஸ் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பிரிஜ் பூஷன் குறித்து மல்யுத்த நடுவர் தகவல்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கூறியிருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் மல்யுத்த நடுவராக இருந்து வரும் ஜக்பீர் சிங், "பிரிஜ் பூஷன் சிங், கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் பெண் வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

‘நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு பாடுபடுகிறது’- பிரதமர்: "வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான பங்களிப்பில் நடுத்தர வருவாய் பிரிவினர் முன்னணியில் உள்ளனர். புதிய இந்தியா உருவாகி வருவதை தங்களின் கடின உழைப்பின் மூலம் அவர்கள் உணர்த்தி வருகின்றனர். நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை அதிக அளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

என்சிபி துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமனம்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25-ம் ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவராக தனது மகளான சுப்ரியா சுலேவை சரத் பவார் நியமித்துள்ளார். மற்றொரு துணைத் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் பவாரின் முன்னணியில் இருவருக்கும் இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

‘எனது கனவு நனவாகி உள்ளது’ - கிரிக்கெட் வீரர் நடராஜன்: இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என நடராஜன் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in