Published : 10 Jun 2023 02:39 PM
Last Updated : 10 Jun 2023 02:39 PM
புதுடெல்லி: “மகாத்மா காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா?” என்று மத்திய அமைச்சருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், "கோட்சே இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்றும், முகலாயர்களைப் போல் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவரில்லை என்றும், இந்தியாவில் பிறந்தவர் என்றும் கூறி இருக்கிறீர்கள். உங்களின் (மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்) இந்தக் கருத்தால், பலர் உங்களை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்று அழைக்க மாட்டார்கள். கொலையாளியின் பிறந்த இடத்தைக் கொண்டு அவரைப் போற்ற முடியாது. இந்த கருத்தை பிரதமரும், உள்துறை அமைச்சரும் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Giriraj Singh :
Godse a ‘saput’ (worthy son) of India
Assassin, born in India unlike the Mughals
By this statement many may not call you a ‘worthy son’of India
Assassins cannot be distinguished by their origin !
Hope the PM and Amit Shah condemn this statement— Kapil Sibal (@KapilSibal) June 10, 2023
இதனையடுத்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கபில் சிபல், "கிரிராஜ் சிங்கின் கூற்றுப்படி கோட்சே நல்லவர். ஆங்கிலேயர்களுக்கு உதவிய அமைப்பு ஆர்எஸ்எஸ். மகாத்மா காந்தியை அவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? இதுபோன்ற மனநிலை மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது" என தெரிவித்துள்ளார்.
மேலும், “வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்க வேண்டும். ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அதன்மூலம், தற்போதைய அரசை வீழ்த்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதன் பின்னணி: திப்பு சுல்தான், அவுரங்கசீப் போன்றோரை புகழ்ந்தும், மராட்டிய மன்னர்களை சிறுமைப்படுத்தியும் சமூக வலைதளங்களில் வெளியான பதிவால் அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் கலவரம் மூண்டது. அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மேற்கொண்ட பந்த் கலவரமாக மாறியது. போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டத்தை அடக்கினார்கள். இதற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கண்டனம் தெரிவித்தார். கலவரத்தைக் கண்டித்த அதே வேளையில் இதுபோன்ற முகலாய மன்னர்களைப் புகழ்வதுபோன்ற விஷமங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றார். மேலும் "அவுரங்கசீப்பை துதிபாடுவதை அனுமதிக்க முடியாது. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் எங்கிருந்து திடீரென அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் தோன்றினார்கள் எனத் தெரியவில்லை" என்றும் பட்நவிஸ் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "பாஜக தலைவர் பட்நவிஸ் வழித்தோன்றல்களை அடையாளம் காண்பதில் நிபுணராக இருக்கிறார். அப்படியே அவர் கோட்சேவின் வழித்தோன்றல்களையும் அடையாளம் கண்டால் நன்றாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஓவைசி கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங், "காந்தியை கோட்சே கொலை செய்திருந்தாலும் கூட அவர் இந்தியாவில் பிறந்தவர். இந்தியாவின் போற்றத்தக்க மகன். பாபர், அவுரங்கசீப் போல் படையெடுத்து வந்த முகலாயர்கள் அல்ல. அதனால் அவுரங்கசீப், பாபரை, திப்பு சுல்தானைக் கொண்டாடுபவர்கள் இந்தியாவின் மகன்களாக இருக்க இயலாது" என்று கூறினார். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT