Last Updated : 10 Jun, 2023 10:09 AM

8  

Published : 10 Jun 2023 10:09 AM
Last Updated : 10 Jun 2023 10:09 AM

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை - உத்தரப்பிரதேச மடாதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி: இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி அறிவுறுத்தி உள்ளார். இதை உடன் வைத்திருக்காத இந்துக்களை உதைக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணன் பிறந்த பூமியான மதுரா, உபியின் புனித நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள பிரிஜ் தாம் எனும் மடத்தின் தலைவராக துறவி யுவராஜ் மஹராஜ் என்பவர் உள்ளார். அதிகப் பிரபலமடையாத இந்துத்துவா அமைப்பான இந்து சேனாவின் தலைவராகவும் துறவி யுவராஜ் பதவி வகிக்கிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய ஒரு வீடியோ வட மாநிலங்களில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் துறவியான யுவராஜ் மஹராஜ் கூறும்போது, ‘இந்துக்கள் அனைவரும் தம்முடன் துப்பாக்கி அல்லது வாள் வைத்திருக்க வேண்டும். இதை வைத்திருக்காதவர்களை நான் ஒரு இந்துவாகவே கருத மாட்டேன். இதுபோன்ற இந்துக்களை நான் உதைக்கப் போகிறேன். அவர்கள் இந்துமதத்தில் இருக்கவே கூடாது.’ எனக் குறிப்பிடுகிறார்.

இதே வீடியோவில் தேவைப்படுவோர் வாள்களை தன்னிடம் விலைக்குப் பெறலாம் எனவும் துறவி யுவராஜ் அறிவித்துள்ளார். இதன் விலை ரூ.1,250 எனவும், பட்டியலினத்தவருக்கு சலுகையாக ரூ.800 விலையில் தருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், வழிபாட்டிற்காக இந்துக்கள் இவரிடம் ஏன் அனுமதிபெற வேண்டும்? என அந்தத் துறவி தனது வீடியோவில் விளக்கவில்லை.

இவரது உருவம் அந்த வீடியோவில் சற்று தெளிவாகத் தெரியவில்லை. இதனால், அதை சில செய்தியாளர்கள் அந்த துறவியை நேரில் சந்தித்து கேட்டிருந்தனர். இவர்களிடம் அந்த வீடியோவில் இருப்பது தாம் தான் என உறுதிப்படுத்திய துறவி யுவராஜ், இதற்காக தன்னை கைது செய்ய எவருக்கும் துணிவு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துறவி யுவராஜ் மீது வந்த சில புகார்களால், மதுரா காவல்துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த விசாரணையில் தவறு நடந்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டால் அதன் மீது யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மாவட்ட எஸ்எஸ்பியான டிரைகன் பைஸன் தெரிவித்துள்ளார்.

இதுபோல், சர்ச்சையாகப் பேசி காவல்துறை நடவடிக்கைகளில் சிக்குவது இந்த துறவி யுவராஜுக்கு புதிதல்ல. கடந்த டிசம்பரில் இவர் டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் 40 வாள்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், ’மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பவருக்கு இந்த வாள்கள் விற்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

சிறையிலிருந்த துறவி யுவராஜுக்கு சில நாட்களுக்கு பின் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் நவம்பரிலும் ஷாயி ஈத்கா மசூதி மீது அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவாகி இருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x