Published : 10 Oct 2017 05:55 AM
Last Updated : 10 Oct 2017 05:55 AM
‘எங்கள் நாட்டில் அமைதி ஏற்பட, இந்தியா உதவ வேண்டும்’ என்று உக்ரைன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பாவ்லோ க்ளிம்கின் கூறுகிறார். ஐக்கிய நாடுகள் சபை விரைவில், சமாதானக் குழு பற்றி விவாதிக்க இருக்கிறது. இந்தக் குழுவில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறும் க்ளிம்கின், பல்வேறு சமயங்களில், இந்தியச் சமாதானத் தூதுவர்களின் பங்களிப்பை வெகுவாகப் புகழ்ந்து இருக்கிறார்.
“அமைதியை நிலை நாட்டுவதில் இந்தியத் தூதுவர்களின் நெகிழ்வுத் தன்மை, பிடிவாதம், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியன ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே கிழக்கு உக்ரைனில் அவர்கள் ஏன் பங்களிக்கக் கூடாது...?” என்றும் வினவி உள்ளார். சத்தியமான வார்த்தை. சரியான கேள்வி. உலகம் எங்கும் செயல்பட்டு வரும் ஐ.நா. அமைதிப் படையில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடம் - இந்தியாவுக்கு. இதுவரை, நாற்பதுக்கும் மேற்பட்ட அமைதிக் குழுக்களில், சுமார் இரண்டு லட்சம் வீரர்கள் வரையில் அனுப்பி, சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது இந்தியா.
ராணுவ வீரர்கள் மட்டுமல்ல; மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என்று பலரை நாம் அனுப்பிக் கொண்டு இருக்கிறோம். ஐ.நா. குழுவில் முதன்முறையாகப் பணியாற்றிய மகளிர் காவலர் அணி, நம்முடையதுதான். 2007-ம் ஆண்டு, லிபேரியாவுக்கு அனுப்பி வைத்தோம். 1950-களில் ஐ.நா. சார்பில், கொரியாவுக்கு இந்திய மருத்துவர் குழு சென்றது. ஏறத்தாழ 4 ஆண்டுகள் போர்க்களத்திலேயே தங்கி இருந்து, பல நூறு உயிர்களைக் காத்தவர்கள் நாம். காங்கோ நாட்டில் உதவி செய்யப் போன நமது வீரர்கள் சுமார் 40 பேர் உயிர் இழந்தனர்.
பொதுத் தேர்தல்கள் நடத்துவதில் நமது உதவி பெற்ற நாடுகள் பல. சமீபத்தில் பாகிஸ்தான் கூட, பொதுத் தேர்தல்களில் வழி நடத்த, ஆலோசனைகள் வழங்க, நமது ஆணையர்களை அழைத்தது!
2005 டிசம்பரில் ஐ.நா. சபை, ‘அமைதி உருவாக்கும் கமிஷன்’ ஒன்றை அமைத்தது. இதில், கலவரத்துக்குப் பிறகான, அமைதியை நிலை நாட்டுவதற்கு, ராணுவம் மற்றும் காவலர்களை அனுப்புவதற்கு பாகிஸ்தான், வங்கதேசம், எத்தியோப்பியா, நைஜீரியா, இந்தியா ஆகிய 5 நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த கமிஷனின் நிர்வாகக் குழுவில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்களுக்கும் நிரந்தர இடம். பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஐந்தில் மூன்று நாடுகள்தாம், உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இவர்கள் கையில் தான் 'வீட்டோ' அதிகாரமும்! இதுதான் விந்தை! இதுதான் விபரீதமும்.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா, வட கொரியா, பாகிஸ்தானால் ஆசிய மண்டலத்தில் இணக்கமான உறவுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதன் காரணமாக, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, நேபாளத்தில் தேவையற்ற பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. தராசு முள் போன்று இருக்க வேண்டிய ஐ. நா. சபை, தனிப்பட்ட சிலரின் கைப்பாவையாக மாறிவிட்டது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் எப்போதோ விரிவு பெற்றிருக்க வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில், ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினராக அத்தனை தகுதிகளும் கொண்டுள்ளன.
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவின் எதிர்ப்பு காரணமாக இவை வெளியில் காத்துக் கிடக்கின்றன. ஆஸ்திரேலியா, நார்வே, பிரேசில், ஜப்பான், இந்தியா ஆகியவை அமைதித் தூதுவர்களாக செயல்படத் தகுதியானவை. அதிலும் இந்தியாவுக்குத் தனியிடம் உண்டு. ஏற்படுத்தித் தந்தது - மகாத்மா காந்தி என்கிற பெயர். அகிம்சையே நமது தேசியக் கொள்கை என்று உலக நாடுகள் கருதுகின்றன.
‘யாவரும் கேளிர்’ என்பதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அதனால்தான் நம் மீது (அநியாயமாக) போர் தொடுத்த சீனா, பாகிஸ்தானுடன் இணக்கமான உறவையே விரும்புகிறோம். அரசுகள் மாறினாலும், அயலுறவுக் கொள்கை மாறுவது இல்லை. இது, நம் தலைவர்களின் பக்குவம், முதிர்ச்சியின் வெளிப்பாடு.
உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பட்டும். அதற்கு இந்தியா தன்னால் ஆனதை செய்யட்டும். உலகின் அமைதித் தூதுவனாக இந்தியாவின் சேவை - ஒட்டுமொத்த மனித குலத்தின் தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT