Published : 27 Oct 2017 03:22 PM
Last Updated : 27 Oct 2017 03:22 PM

புளூவேல் விளையாட்டின் விபரீதங்களை விளக்கி தூர்தர்ஷனில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புளூவேல் விளையாட்டின் விபரீதங்கள் குறித்து அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் எனப்படும் முக்கியமான நேரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், தனியார் சேனல்களும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த ஒரு விஷயமும் கண்டனத்துக்குரியதே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவாரத்துக்குள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தயார் செய்ய வேண்டும் என்றும் குறைந்தது 10 நிமிடமாவது இந்த நிகழ்ச்சி நீடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

புளூவேல்  விளையாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று (அக்.27- 2017) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் கூறியதாவது:

புளூவேல்  விளையாட்டு உயிருக்கு ஆபத்தானது என்பது உறுதிபட புலப்படுகிறது. உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதுவானாலும் அது கண்டனத்துக்குரியதே. எனவே, ப்ளூவேல் விளையாட்டின் விபரீதங்கள் குறித்து அரசின் தூர்தர்ஷன் தொலக்காட்சியில் ப்ரைம் டைம் எனப்படும் முக்கியமான நேரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும்.

ஒருவாரத்துக்குள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தயார் செய்ய வேண்டும் என்றும் குறைந்தது 10 நிமிடமாவது இந்த நிகழ்ச்சி நீடிக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கான கருத்தாக்கத்தை உள்துறை அமைச்சகம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுடன் இணைந்து தூர்தர்ஷன் இறுதி செய்யட்டும். அதேபோல், தனியார் சேனல்களும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பரிந்துரைக்கக் காரணம் பெற்றோரும் குழந்தைகளும் ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டின் விபரீதங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. குழந்தைகள் இத்தகைய விளையாட்டுகளில் சிக்கிவிடக் கூடாது என்பதே நிகழ்ச்சி சொல்லும் கருத்தாக இருக்க வேண்டும். தனிமையிலும் விரக்தியிலும் தவிக்கும் குழந்தைகள் ஏராளமாக இருக்கின்றனர். இந்நிலையில், திரைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுவரை 28 சம்பவங்கள் அறியப்பட்டுள்ளன..

மத்திய அரசு சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, "மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைத்த குழுவின் தகவலின்படி இந்தியா முழுவதும் ப்ளூவேல் விளையாட்டால் நிகழ்ந்ததாக 28 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று வாரங்களில் காரணங்கள் உறுதிப்படுத்தப்படும்.

இந்த ஆன்லைன் விளையாட்டை நிறுத்துவதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. அரசின் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளுக்கும், ஆன்லைன் இயங்குதளங்களுக்கும் ப்ளூவேல் விளையாட்டு தொடர்பான துப்புகளை பகிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

புளூவேல்  விபரீதம்:

ரஷ்யாவில் உளவியல்பட்டம் படித்த பிலிப்(22) என்ற மாணவர்தான் இந்த ‘ப்ளூவேல்’(BLUE WHALE) விளையாட்டை உருவாக்கியவர். 2013-ல் இருந்து ஆன்லைனில் இந்த விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்துள்ளார்கள். இந்த விளையாட்டுக்கான லிங்க் ஆன்லைனிலோ ஸ்மார்ட் போனிலையோ பெற முடியாது. டவுன் லோடு செய்ய முடியாது.

12, 19 வயதுக்காரர்களை குறிவைத்து இந்த விளையாட்டுக்கான ‘லிங்க்’ சமூக வலைத்தளங்கில் அனுப்புகிறார்கள். பொதுவாக இந்த விளையாட்டிற்கான ஆர்வத்தை இந்த விளையாட்டில் ஈடுபடுவோரின் மரணம்தான் ஏற்படுத்துகிறது. அப்படி என்னதான் இந்த விளையாட்டில் இருக்கிறது என்று நினைப்பவர்கள்தான் சிக்குகிறார்கள்.

இந்த விளையாட்டு ’50 டேஸ், 50 டாஸ்க்(task)’ என்ற அடிப்படையில் தினமும் ஒரு விளையாட்டு கொடுக்கப்படுகிறது. முதலில் எல்லோராலும் செய்யக்கூடிய உளவியல் சார்ந்த சிறுசிறு விளையாட்டைக் கொடுக்கிறார்கள்.

உதாரணமாக பிளேடால் கையை வெட்டிக் கொள், உதட்டை கடித்துக் கொள், காலை 4 மணிக்கு எழு என்பார்கள். அவர்கள் அனுப்பும் மியூசிக்கை, வீடியோக்களை பார்க்கனும். இப்படி போக போக நாமே நினைத்தாலும் அதிலிருந்து விலக முடியாதபடிக்கு த்ரிலிங்கான விளையாட்டாக கொண்டு சென்றுவிடுவார்கள். வெளியேற நினைத்தால் மிரட்டப்படும் நிலையும் ஏற்படுமாம்.

இதில் ஒவ்வொரு விளையாட்டையும் முடிக்கும்போது அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அவர்கள் விளையாட்டை முடித்திற்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அந்த விளையாட்டின் பொறுப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும். இப்படி குறிப்பிட்ட கட்டத்தில் ‘ஐ எம் ஏ ப்ளூவேல்’ என ஸ்டேட்ஸ் போட வைப்பார்கள். கடைசி 50வது நாள், 50 விளையாட்டி தற்கொலை என்பதுதான் இந்த விளையாட்டின் இறுதிவடிவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x