Published : 09 Jun 2023 03:49 PM
Last Updated : 09 Jun 2023 03:49 PM
டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எதிராக வெறுப்பு பேச்சு புகார் மற்றும் பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக வழக்குப் பதிவு செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவிற்கு பதில் அளிக்கும் விதமாக அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (action taken report) நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தாக்கல் செய்தனர்.
போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில்,"டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது மல்யுத்த வீராங்கனைகள் பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பிய கோஷம், வெறுக்கத்தக்க பேச்சு வகையின் கீழ் வரக்கூடியது. இது அவர்கள் பிரதமரை கொலைசெய்யப் போவதாக மிரட்டியதைத் தெளிவாக உணர்த்தியது" என்று புகார்தாரர் தெரிவித்திருந்தார்.
புகார்தார் தனது புகாரில் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆதாரமாக அவர் கொடுத்திருந்த வீடியோ காட்சிகளில் எந்த விதமான வெறுக்கத்தக்க முழக்கங்களும் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் மற்ற பிற மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் அதுபோன்ற எந்த விதமான முழக்கங்களையும் எழுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த மனுவினை தள்ளுபடிசெய்யவும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக வீராங்கனைகளுக்கு எதிராக அடல் ஜன் கட்சியின் தேசிய தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் பாம் பாம் மகாராஜ் நவுஹாதியா என்பவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை ஜூலை 7-ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
போராட்டம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் போது நாடாளுமன்றம் நோக்கில் பேரணி செல்லவும் முயன்றனர். அதன் காரணமாக காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகினர். அவர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.
ஒத்திவைப்பு: இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சாக்ஷி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். அதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அழைப்பின் பேரில் புதன்கிழமை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜூன் 15 ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூன் 15 ம் தேதி வரை தங்களின் போராட்டத்தினை நிறுத்தி வைப்பதாக வீரர்கள் அறிவித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...