Published : 08 Jun 2023 03:42 PM
Last Updated : 08 Jun 2023 03:42 PM
புதுடெல்லி: ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிற்கான இந்தியாவின் கொள்கை என்பது அந்நாட்டு மக்களுக்கு உதவுவதுதான் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனையை விவரிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஜெய்சங்கரிடம், ஆப்கனுக்கான இந்தியாவின் கொள்கை மற்றும் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்குள்ள நமது தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பு கருதி நாம் திரும்ப அழைத்துக் கொண்டோம். பல்வேறு நாடுகளும் இதேபோல் அழைத்துக்கொண்டன.
குறைவான அரசியல்; அதிகப்படியான உதவி : அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில், நாம் காபூலில் உள்ள நமது தூதரகத்திற்கு தொழில்நுட்பக் குழுவை அனுப்பினோம். அந்தக் குழு தற்போது அங்கு உள்ளது. அவர்களின் முக்கியப் பணி, அங்குள்ள சூழலை கண்காணிப்பதும், எவ்வாறு நாம் ஆப்கன் மக்களுக்கு உதவ முடியும் என்பதை அறிவதும்தான். ஆப்கனிஸ்தான் விஷயத்தில் இந்தியாவின் நோக்கம் குறைவான அரசியல்; அதிகப்படியான உதவி என்பதுதான். ஆப்கன் மக்களுக்கான தேவை அதிகம். தடுப்பூசி பற்றாக்குறை, கோதுமை பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை போன்ற பற்றாக்குறைகளைப் போக்க இந்தியா உதவி இருக்கிறது. ஆப்கன் மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என நினைப்பதற்குக் காரணம் அந்நாடு, வரலாற்று ரீதியாக இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டது" என தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "தலிபான் அரசை இந்தியா அங்கீகரிக்கவில்லை. ஆப்கனிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதில் நமது நிலைப்பாடு மாறவில்லை. அந்நாட்டு அரசை நாம் இன்னும் அங்கீகரிக்காததால் இரு நாடுகளுக்கும் இடையே கடிதத் தொடர்பு போன்றவை ஏற்படவில்லை" என தெரிவித்திருந்தார்.
கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், "ஆப்கனிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஆப்கனிஸ்தானின் 34 மாகாணங்களிலும் 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்சார உற்பத்தி, குடிநீர் விநியோகம், சாலை இணைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...