Published : 08 Jun 2023 05:43 AM
Last Updated : 08 Jun 2023 05:43 AM
மும்பை: சமூக வலைதளத்தில் திப்பு சுல்தான்படத்தை அவமதிக்கும் வகையில் ஆடியோவுடன் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் வெளியாகின. இதுதொடர்பாக அம்மாநிலத்தின் கோல்ஹாபூரில் நேற்று இரு பிரிவினரிடையே மோதல் நடைபெற்றது. அப்போது, போராட்டக் காரர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
இதுகுறித்து கோல்ஹாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர பண்டிட் கூறியதாவது: கோல்ஹாபூரில் பதற்றத்தை தணிக்க போலீஸார் முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலியான செய்திகள் பரவாமல் தடுக்க புதன்கிழமை பிற்பகல் முதல்வியாழன் மாலை வரை இணைய சேவையை நிறுத்த வேண்டும் என காவல் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநில ரிசர்வ் போலீஸ் படையின் (எஸ்ஆர்பிஎஃப்) வீரர்கள் நகரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சதாராவிலிருந்து கூடுதல் படைகளை அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு ஜூன் 19-ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் படத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மகேந்திர பண்டிட் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT