Published : 07 Jun 2023 01:41 PM
Last Updated : 07 Jun 2023 01:41 PM
பெங்களூரு: பாஜகவோடு கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், "கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக எனும் இரு தேசிய கட்சிகளுக்கும் எதிராகத்தான் எங்கள் கட்சி இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இரு கட்சிகளையும் எதிர்த்துத்தான் தேர்தலை எதிர்கொண்டோம். ஆனால், திடீரென மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜவோடு கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. யார் இவ்வாறு பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவோடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைக்குமா என கேட்கிறீர்கள். தற்போதைய நிலையில் அதுபோன்ற எந்த யோசனையும் எங்களுக்குக் கிடையாது. யாரிடம் இருந்தும் எங்களுக்கும் அழைப்பு வரவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே நாங்கள் இரண்டு தேசிய கட்சிகளையும் எதிர்த்துத்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதும் அது அப்படியேதான் தொடருகிறது" என தெரிவித்தார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, குமாரசாமியும் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, "ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசியம் விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தெரிய வேண்டும்" என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT