Published : 01 Oct 2017 10:36 AM
Last Updated : 01 Oct 2017 10:36 AM
திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதம் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. கடந்த 1940-ம் ஆண்டு முதல்தான் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஏழுமலையானின் பிரசாதங்கள் பல வடிவங்கள் எடுத்துள்ளன.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.830) ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. அந்த காலத்தில் பக்தர்கள் மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்க பல நாட்களாகும். அதன் பின்னர் சில நாட்கள் மலையிலேயே தங்கி தாங்களே உணவை தயாரித்து உண்டு வந்தனர். அப்போது சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் ஊர் திரும்பிச் சென்று வீடு போய் சேரும் வரை அவர்களுக்கு கோயில் பிரசாதம் தேவைப்பட்டது.
இதன் காரணமாக முதன் முதலில் ‘திருப்பொங்கம்’ எனும் பிரசாதம்தான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கால கட்டத்தில்தான் சுவாமிக்கு ‘நைவேத்தியம்’ படைக்கும் முறை நிரந்தரமானதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதன்பின் கி.பி.1445-ல் ‘சுய்யம்’ எனப்படும் பணியாரம் பிரசாதமாக வழங்கப்பட்டது. 1455-ல் அப்பம், 1460-ல் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு 1468-ல் அதிரசம், 1547-ல் மனோஹரம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கடந்த 1803-ம் ஆண்டு முதல்தான் மதராஸ் மாகாணம் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யும் முறையை கொண்டு வந்தது. அப்போது முதலில் பூந்திதான் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை தொடங்கியது. தற்போதைய கல்யாண உற்சவ லட்டு அளவில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது. இந்த லட்டு ஆரம்பத்தில் எட்டு அணாவிற்கு ஒன்று வீதம் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லட்டு, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.15 எனவும் தற்போது ஒரு லட்டு ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.
ஆனால் ரூ.2- க்கு லட்டு விற்பனை பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம், கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.100. பக்தர்கள் வாங்கும் லட்டு ‘ப்ரோக்தம் லட்டு’ என்றழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.25 ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT