Last Updated : 16 Oct, 2017 09:11 PM

 

Published : 16 Oct 2017 09:11 PM
Last Updated : 16 Oct 2017 09:11 PM

எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்து அழிக்கும் போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் கில்தான்’ கடற்படையில் சேர்ப்பு

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 3-வது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கில்தான் இந்திய கடற்படையில் சேர்க்கப் பட்டது. நீர்மூழ்கி கப்பலின் ஒரு பிரிவான இது, எதிரி நாட்டு நீர்மூழ்கியைக் கண்டறிந்து அதை அழிக்க உதவும்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத் தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், கில்தான் கப்பலை கடற்படையில் முறைப்படி சேர்த்தார். இந்நிகழ்ச்சியில் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, கிழக்கு பிரிவு தளபதி எச்.எஸ்.பிஷ்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “ஐஎன்எஸ் கில்தான் நமது பாதுகாப்பு நடைமுறைக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும். மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உதாரணமாக விளங்கும்” என்றார்.

109 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் சுமார் 3,500 டன் எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. 81 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இது, அணு, உயிரியல், ரசாயனம் என எத்தகைய போர் ஏற்பட்டாலும் அதை எதிர்த்துப் போரிடும் திறன் கொண்டது. கார்பன் பைபர் கூட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் முக்கிய போர்க்கப்பல் என்ற பெயர் இதற்குக் கிடைத்துள்ளது.

இது ராடாரில் கண்டறிய முடியாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் குறைவான எடை மற்றும் குறைவான பராமரிப்பு செலவைக் கொண்டதாக இருக்கும். இதில் கனரக நீர்மூழ்கி குண்டு, ஏஎஸ்டபிள்யூ ராக்கெட்கள், 76 எம்எம் கேலிபர் துப்பாக்கி மற்றும் 2 மல்டி-பேரல் 30 எம்எம் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும். வரும் காலத்தில் தரையிலிருந்து வான் பரப்புக்கு ஏவுகணையை ஏவும் முறை (எஸ்ஏஎம்) மற்றும் அதிநவீன ஏஎஸ்டபிள்யூ ஹெலிகாப்டர் ஆகியவை இதில் சேர்க்கப்படும்.

கடந்த 2003-ல், ‘புராஜெக்ட் 28’ என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4 நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, ஐஎன்எஸ் கமோர்டா (2014), ஐஎன்எஸ் கடாமத் (2016) ஆகிய 2 கப்பல்கள் ஏற்கெனவே கடற்படையில் சேர்க்கப்பட்ட நிலையில் 3-வதாக ஐஎன்எஸ் கில்தான் நேற்று சேர்க்கப்பட்டது. 4-வது கப்பலான ஐஎன்எஸ் கவரட்டியின் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதியில் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x