Published : 06 Jun 2023 05:08 AM
Last Updated : 06 Jun 2023 05:08 AM
புதுடெல்லி: புவி வெப்பமயமாதலுக்கு காரணமான காரியமில வாயு வெளியேற்றத்தை 2070-க்குள் பூஜ்ஜிய நிலைக்கு குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், டாடா குழுமத்தின் டாடா அகரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ் நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் கடந்த வாரம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மின் வாகன பேட்டரி தொழிற்சாலை நிறுவப்படும். இதில் லித்தியம்-அயன் செல்கள் தயாரிக்கப்படும்.
இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 13 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் லித்தியம் பேட்டரி உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிக்கும்.
கடந்த 2021-ல் இந்தியாவின் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.3,169 கோடியாக இருந்தது. இது வரும் 2030-ல்ரூ.12.58 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.7,680 கோடி மதிப்பிலான 45 கோடி லித்தியம் பேட்டரிகளை இந்தியா இறக்குமதி செய்தது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிப்பு மற்றும் 5ஜி நெட்வொர்க் ஆகியவற்றை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது சர்வதேச மற்றும் பிராந்திய புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சவால்களை சமாளிக்க லித்தியம் பேட்டரிகள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த சூழலில் காஷ்மீரில் நிலத்துக்கடியில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் நில உரிமையாளருக்கு உரிமை உண்டு. அதேநேரம் உணர்வுபூர்வமான தாதுப் பொருட்களை தனியார் எடுத்துக்கொள்ள மத்திய அரசு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
லித்தியம் மிகவும் முக்கியமான வளம் என சிலி நாட்டு அரசு வரையறுத்துள்ளது. அதன் வளர்ச்சி நாட்டின் பிரத்யேக உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. அந்நாட்டில் லித்தியம் தயாரிக்க 2 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தேசிய லித்தியம் கொள்கையை சிலி அதிபர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இது வருங்கால லித்தியம் திட்டங்களில் அரசும் தனியாரும் கூட்டாக ஈடுபட வகை செய்கிறது.
பொலிவியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசமைப்பு, இயற்கை வளங்கள் தொடர்பான ஆய்வு, சுரண்டல், தொழில்மயமாக்கல், போக்குவரத்து மற்றும் வர்த்தகமயமாக்கல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கி உள்ளது. மெக்சிகோவில் லித்தியத்தை தேசியமயமாக்கும் உத்தரவை அந்நாட்டு அதிபர் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்தார்.
இந்தியாவுக்கான வழி என்ன?: லித்தியம் துறையின் மேம்பாட்டுக்கு மிக உயர்ந்த செயல்திறன் தேவை. சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல இலக்குகளை எட்ட லித்தியம் மிகவும் அவசியம். இந்தியாவில் கனிம செல்வத்தின் பெரும்பகுதி, வறுமை, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் தளர்வான கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT