Published : 08 Oct 2017 08:21 AM
Last Updated : 08 Oct 2017 08:21 AM
திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில்ரூ. 25 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
பக்தர்களிடம் குறை கேட்கும் ‘டயல் யுவர் இஓ’ நிகழ்ச்சி, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தெரிவித்த நிறை, குறைகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி தரிசனம்
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பசுமை திட்டத்தின் அடிப்படையில் திருமலையை ரூ.25 கோடியில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் எந்தவித சிரமும் இன்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பெய்யும் தொடர் மழை காரணமாக திருமலையில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. இந்த மழை காரணமாக மேலும் 209 நாட்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது.
உண்டியல் பணம் எண்ணும் பணியில் தனியார் வங்கி ஊழியர்களையும் ஈடுபடுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
பிரம்மோற்சவ விழா
அதிகாரிகள், காவல் துறையினர், பக்தர்களின் துணையுடன் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்தப்பட்டது. ஆர்ஜித சேவை டிக்கெட்கள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமலையில் உள்ள கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT