Published : 05 Jun 2023 03:58 PM
Last Updated : 05 Jun 2023 03:58 PM
புதுடெல்லி: பாதுகாப்பு உபகரண கூட்டு உற்பத்திக்கு இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் III, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இது தொடர்பாக இன்று(ஜூன்5) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்தைப்பை அடுத்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் III ஆகியோர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பது தொடர்பாக ஆலோசித்தனர்.
பாதுகாப்பு உபகரணங்களுக்கான நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆராய்ந்தனர். இதன்மூலம், இந்தியாவும் அமெரிக்காவும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இணைந்து வளர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அடையாளம் காண முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே உள்ள மற்றும் புதிய பாதுகாப்புத் தளவாடங்களை இணைந்து உற்பத்தி செய்யவும், இரு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை எளிதாக்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்க-இந்திய பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு இரு நாடுகளின் கொள்கை எந்த திசையில் இருக்கும் என்பதை காட்டும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் III ஆகியோர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதன் அவசியம் குறித்தும் அதில், தங்களுக்கான பங்கு குறித்தும் விவாதித்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT