Published : 02 Jun 2023 03:52 PM
Last Updated : 02 Jun 2023 03:52 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சுவரோவியத்தால் நேபாளத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த சுவரோவியத்தில் அகண்ட பாரதம் தீட்டப்பட்டுள்ளது. அதில் நேபாளத்தின் லும்பினி இந்தியாவில் இருப்பது போல் தீட்டப்பட்டுள்ளது. லும்பினி என்பது நேபாளத்தில் உள்ள புத்தரின் பிறப்பிடம். அதனை இந்தியாவில் இருப்பதுபோல் அந்த சுவரோவியம் காட்டுவதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
புத்தர் பிறப்பிடமான லும்பினியை நேபாளம் தனது கலாச்சார அடையாளமாகப் போற்றுகிறது. இந்நிலையில், அதனை இந்தியா அகண்ட பாரத வரைபடத்தில் இணைத்துள்ளது. அகண்ட பாரதம் என்ற பெயரில் இந்தியா எல்லை மீறியுள்ளதாக நேபாள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் கண்டனம்: நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "இந்தியாவில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தில் அகண்ட பாரதம் சுவரோவியம் இடம் பெற்றுள்ளது. இந்த சுவரோவியம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது தூதரக உறவுக்கு அபாயகரமானது. இந்தியாவுடனான பெரும்பாலான அண்டை நாடுகளுடனான உறவில் சிக்கல் நிலவும் சூழலில் இதுபோன்ற சுவரோவியம் மேலும் இத்தகைய உறவுச் சிக்கலை மோசமாக்கும். நேபாளத்துடனான உறவில் விரிசல் ஏற்படும். இது நம்பிக்கையை சிதைக்கும் செயல்" என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தான் முதன்முதலில் இந்த சுவரோவியத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து அகண்ட பாரதம் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது அதுதான் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் என்ற பிரச்சண்டா இந்தியாவில் சுற்றுப்பயணத்தை துவக்கிய நாள் முதலே நேபாள ஊடகங்கள் இந்த சர்ச்சையை பெரிதாக வெளிச்சத்துக்கு கொண்டு வரத் தொடங்கின. தற்போது அரசியல் கட்சிகள் பலவும் கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளன.
வரைபட சர்ச்சை: ஏற்கெனவே காலாபானி எல்லை சர்ச்சை ஒன்று இந்தியாவுக்கும் - நேபாளத்துக்கும் இடையே உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காலாபானி எல்லை சர்ச்சை நிலவி வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகள் என்று நேபாளம் கூறி வருகிறது. 2019-ல் இந்தப் பகுதிக்கு உரிமை கோரி இருநாடுகளும் மாறி மாறி வரைபடங்களை வெளியிட்டன. இந்நிலையில் இப்போது அகண்ட பாரத சுவரோவியத்தால் பிரச்சினை உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT