Published : 02 Jun 2023 08:23 AM
Last Updated : 02 Jun 2023 08:23 AM

ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மணிப்பூர் வன்முறையாளர்களுக்கு அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை

அமித் ஷா

இம்பால்: மணிப்பூரில் 38 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 53 சதவீதம் பேர் மேதேயி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் மாநில அரசியலில் இவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய முதல்வர் பிரேன் சிங் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

மணிப்பூரில் குகி, நாகா, அங்கமிஸ், லூசாயிஸ், தாட்வாஸ் உள்ளிட்ட சமுதாயங்களை சேர்ந்த மக்கள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் மேதேயி சமுதாய மக்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மே 3-ம் தேதி மேதேயி, குகி சமுதாய மக்களுக்கு இடையே மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

சுமார் ஒரு மாதமாக நீடிக்கும் கலவரத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 4 நாட்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறார். இரு சமுதாய மக்களின் தலைவர்களை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிபிஐ அமைப்பின் சிறப்பு புலனாய்வுக் குழு மணிப்பூர் கலவர வழக்குகளை விசாரிக்கும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தும். மணிப்பூரில்வன்முறையில் ஈடுபடும் நபர்கள்தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடுமையானவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

இன்று முதல் நிவாரண உதவி

வதந்திகளை பரப்பி கலவரத்தை தூண்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்குவெள்ளிக்கிழமைமுதல் நிவாரண உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மணிப்பூரின் மோரே நகரில் சுமார் 20,000 தமிழர்கள் வாழ்கின்றனர். மணிப்பூர் கலவரத்தில் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள நிவாரண முகாமை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

அப்போது மோரே தமிழ்ச் சங்கம், மலைவாழ் பழங்குடி கவுன்சில், குகி மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி போதிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தினார்.

வீடு வீடாக சோதனை

கலவரத்தின்போது பாதுகாப்புப் படை வீரர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்களை வன்முறையாளர்கள் கொள்ளையடித்தனர். அந்த ஆயுதங்களை மீட்க புதிய காவல் துறை தலைவர் ராஜேஷ் சிங் தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளார். இதன்படி ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தப்படும். வன்முறையாளர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று மாநில காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x