Published : 02 Jun 2023 06:20 AM
Last Updated : 02 Jun 2023 06:20 AM
தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திவரும் சம்பவமாக மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அமைந்துள்ளது. இப்போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளித்து வருவதாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆளும் பாஜக எம்பியாக இருப்பதாலும் இப்போராட்டம் விவாதத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
இதற்கிடையே பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று டெல்லி காவல் துறை அறிவித்துவிட்டதாக பொய் பிரச்சாரம் பரவியது. ஆனால் இதை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தமட்டில், வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். டெல்லி காவல்துறையினர் ஆதாரத்துடன் கைது செய்யவே முயற்சி எடுத்து வருவதாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் கூட, காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அது இன்னும் விசாரணை நிலையிலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை மூலம் நீதி கிடைக்காவிட்டால், மகளிர் ஆணையம், நீதிமன்ற முறையீடு என எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, போராட்டம் நடத்துபவர்கள் மாற்று வழிகளையே நாடிச் செல்வது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 105-ன் அடிப்படையில் எம்.பி.க்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சில விதிவிலக்குகள் உள்ளன. ஆனால் இந்த சலுகைகள் சிவில் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பொதுவாக பாலியல் குற்றச்சாட்டு என்று வரும்போது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில், டெல்லி காவல்துறை பெரும் நெருக்கடிக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், பிரிஜ் பூஷனை ஏன் கைது செய்யவில்லை என்பதே போராட்டம் நடத்துவோரின் கேள்வி. பாதிக்கப்பட்டோர் தரப்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றாலும்கூட, நாடகத்தன்மையுடன் கூடிய போராட்டம், அரசியல் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வெளிப்படையான ஆதரவு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாக்�ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா போன்றோர் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் வாபஸ் பெற்றது போன்றவை அரசியல் கலப்புக்கு வித்திட்டுள்ளது.
இதோடு நிற்காமல், கிராமங்களில் சட்டவிரோத பஞ்சாயத்து நடத்தும் விவசாய அமைப்புகளின் தலைவர் நரேஷ் டிகைத், நேற்று முசாபர்நகர் சூரன் கிராமத்தில் நடைபெற்ற ‘மகாபஞ்சாயத்து’ நிகழ்ச்சியில் இந்த போராட்டம் குறித்து விவாதித்தார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தின் மூலம் நியாயம் பெறும் நிலையில் இருந்து அவர்கள் விலகிச் செல்லும் போக்கையே காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றாலும், ஆதாரங்களைத் திரட்டி அதன்பிறகே காவல்துறை மேல்நடவடிக்கையில் ஈடுபட முடியும். அதற்குரிய கால அவகாசத்தை அளிக்க வேண்டும். காவல் துறை மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவதே முறையானது. தவறான வழிகாட்டுதலுக்கு இடம் கொடுக்காமல் ஜனநாயக நெறிகளின்படி நீதியைப் பெற அவர்கள் முயற்சிப்பதே பொருத்தமானதாக அமையும்.
சந்தேகம் எழுப்பும் போராட்டம்?: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.புஷ்பாவதி, ‘இந்து தமிழ் திசை’ யிடம் கூறியதாவது: மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை நியாயமானது என்றால் அதற்கு சட்டரீதியாக தீர்வு காண ஆயிரம் வழிகள் உள்ளன.
ஆனால் அவர்கள் இந்த சம்பவத்தை தேவையின்றி அரசியலாக்க முற்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிரமான, கடுமையான நடவடிக்கை எடுக்க குற்றவியல் (திருத்த) சட்டம் வழிவகை செய்கிறது. பணியிடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணம்) சட்டம் உள்ளது.
எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டு அல்லது புகார் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தகுந்த சாட்சியங்கள், ஆதாரங்கள் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்த போதிலும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை நாடலாம். அல்லது நேரடியாக உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுகி பரிகாரம் தேட முடியும். இவ்வாறு வழக்கறிஞர் டி.புஷ்பாவதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT