Published : 27 May 2023 06:43 AM
Last Updated : 27 May 2023 06:43 AM
உதகை: யானைகள் வழித்தடத்தில் அத்துமீறி மரங்கள் வெட்டி பாதை அமைக்கப்பட்டது தொடர்பாக, பர்லியாறு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்காகவோ, நிலத்தை சமன் செய்து வீடு கட்டுவதற்காகவோ,அரசு துறைகளின் பணிகளுக்காகவோ கனரக இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு, ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இவ்வாறு முறையாக வழங்கப்படும் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாமல், சிலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, குன்னூர் வட்டம் பர்லியாறு கிராமத்திலுள்ள பட்டாநிலத்தில் காபி, மிளகு பயிரிடுவதற்காக கனரக வாகனத்தை பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கண்ட பகுதியில் நிபந்தனைகளை மீறி இயங்கிய கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குன்னூர் வட்டாட்சியரின் அறிக்கையின் அடிப்படையில், எஸ்டேட் நிர்வாகத்துக்கு கனரக வாகனம் இயக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் கனரக வாகனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குன்னூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் கடமைகளை செய்ய தவறிய பர்லியாறு கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், கிராம உதவியாளர் சுரேஷ் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின்விவரத்தை உடனடியாக சமர்ப்பிக்க, நீலகிரி கோட்ட வன அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் செயலாளர், வனச்சரகத்தின் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவின் உறுப்பினர்கள், கனரக இயந்திரம் அனுமதி வழங்கப்பட்ட பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? அனுமதியின்றி மரங்கள் ஏதும் வெட்டப்படுகின்றனவா? அனுமதியின்றி கற்கள் ஏதும் உடைக்கப்படுகின்றனவா? என்பதை கண்காணித்து, விதிமீறல்கள் இருப்பின் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல்தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட குழு உறுப்பினர்கள் தங்களது பணிகளை சரியாக செய்கிறார்களா? என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர்,கோட்டாட்சியர், வட்டாட்சியர், வனச்சரக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பணிகளில் ஏதேனும் சுணக்கம் காணப்பட்டு புகார்கள் ஏதும் பெறப்படுமானால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களின் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT