Published : 24 May 2023 06:28 AM
Last Updated : 24 May 2023 06:28 AM
சேலம்: சேலத்தை அடுத்த வீரபாண்டியில், கொப்பம் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதால், மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலத்தை அடுத்த வீரபாண்டி ஊராட்சியில், சுமார் 30 ஏக்கர் பரப்பில் கொப்பம் ஏரி உள்ளது. திருமணிமுத்தாற்றை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள கொப்பம் ஏரி, தற்போது நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிப்பு உரிமம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில், அது ரத்து செய்யப்பட்டது.
ஏரியில் மீன்கள் அதிகமாக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மீன்கள் ஏராளமாக இறந்து மிதந்தன. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறந்து மிதந்த மீன்கள் ஒவ்வொன்றும் சுமார் அரை கிலோ எடைக்கு மேல் இருந்தன.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள், கொப்பம் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால், ஏரி நீரை கால்நடைகள் பருக அனுமதிக்க வேண்டாம், மீன்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து, ஏரி அருகே பதாகை வைத்தனர்.
இதனிடையே, ஏரியில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றப்படாமல் இருப்பதால், கடும் துர்நாற்றம் எழுந்து ஏரியின் சுற்று வட்டாரம் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக, அரியானூர்- ஆட்டையாம்பட்டி சாலையை ஒட்டி ஏரி அமைந்துள்ளதால், அவ்வழியாகச் செல்லும் பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கூறுகையில், ‘ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் ஏரி நீர் முழுவதும் மாசடைந்து, சுகாதாரக்கேடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, மீன்களை உடனே அகற்ற வேண்டும். மீன்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
இது குறித்து வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜகணேஷ் கூறுகையில், ‘ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததற்கான காரணத்தை அறிய மீன் வளத்துறையிடம் கேட்டுள்ளோம். அவர்களது ஆய்வுக்குப் பின்னர், மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இறந்து கிடக்கும் மீன்களை அகற்றி, கிருமிநாசினி தெளித்து, மண்ணில் புதைக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT