Published : 23 May 2023 06:10 AM
Last Updated : 23 May 2023 06:10 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பள்ளம் பகுதியில் விளைநிலங்களில் நுழையும் யானைகளை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் முதல்முறையாக ‘தொங்கும் சூரிய மின்வேலி’ அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரக பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக யானைகள் வெளியேறி விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் ஆங்காங்கே வனத்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதுதவிர, சில இடங்களில் யானைகளின் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
அதேபோல, மின்பாதை, சட்ட விரோத மின் வேலி போன்றவற்றில் சிக்கி யானைகளும் உயிரிழந்தன. இந்நிலையில், யானைகள் விளைநிலங்களில் நுழைவதைத் தடுக்க யானை தாண்டா பள்ளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற் கொண்டனர். அதன்படி, ஈச்சம்பள்ளம் பகுதியில், ‘தொங்கும் சூரிய மின்வேலி’ அமைக்கப்பட்டுள்ளது.
பேவுஅள்ளி ஊராட்சி ஈச்சம்பள்ளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக யானைகள் அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறிய பகுதியை தேர்வு செய்து 2.5 கிலோ மீட்டர் தூரம் இந்த மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக ஈச்சம்பள்ளம் பகுதியில் இவ்வகை மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. 20 அடி உயர கட்டமைப்பு கொண்ட இந்த மின்வேலி ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மின்வேலியின் பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலைமையில் பேவுஅள்ளி ஊராட்சித் தலைவர் பிரகாஷ், ஊர்த் தலைவர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதுகுறித்து, பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் கூறியது:
கடந்த சில மாதங்களாக யானைகளால் ஏற்பட்டு வந்த சிக்கல் குறித்து ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். உடனே ஆட்சியர் இந்த முன்னோடி திட்டத்தை ஈச்சம்பள்ளம் பகுதியில் அமைத்திட ரூ.16 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தார். மேகமூட்டத்துடன் கூடிய தொடர் மழை நாட்களில் கூட ஓரிரு நாட்கள் வரை தடையற்ற மின் விநியோகம் கிடைக்கும் வகையில் இந்த தொங்கும் சூரிய மின்வேலிக்கான கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அலுமினியக் கம்பிகள் காற்றில் அசையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. யானை கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடலில் இந்த கம்பிகள் மோதும்போது அவை அதிர்ச்சி அடைந்து, சற்றே நிலைகுலைந்து பின்வாங்கிச் செல்லும் வகையில் தாக்கம் ஏற்படும்.
இதன் வெற்றி சதவீதத்தை கண்காணித்து, வனத்தையொட்டி கூடுதல் தொலைவுக்கு இவ்வகை மின்வேலி அமைக்க அரசை வலியுறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல, இந்த தொங்கும் மின்வேலி் திட்டம் சேதமின்றி நீண்ட காலத்துக்கு பயனளித்திட, ‘இது நமக்கான திட்டம்’ என உணர்ந்து உள்ளூர் மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT