Published : 15 May 2023 07:55 PM
Last Updated : 15 May 2023 07:55 PM

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்: சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு

சென்னை: மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மெரினா கடலில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், திட்டத்தை தொடர தமிழக அரசு முனைப்பு காட்டியது.

இந்நிலையில், இந்த சின்னம் அமைப்பது CRZ மண்டலத்துக்குள் வருவதால், கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பதால் கடலுக்குள் பேனா அமைக்கும் இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி மீனவர்கள் அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பேனா சின்னத்தை மெரினா கடலில் அமைப்பதற்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் வழக்கறிஞர் ஆனநத் கண்ணன் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பது கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 34 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். கூவம் நதியின் முகத்துவாரப் பகுதி என்பது இறால் மற்றும் நண்டுகள் அதிகம் காணப்படும் பகுதியாகும். அங்கு மேற்கொள்ளப்போதும் பேனா நினைவு சின்னக் கட்டுமானத்தால் அவை பாதிக்கப்படும்.

இந்தத் திட்டம் மக்களின் வரிப்பணத்தை வீண்டிப்பதாகும். அதேபோல் இவ்வாறான திட்டத்தை செயல்படுத்தும் முன் நிலையான வளர்ச்சி உள்ளிட்டவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இவை எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

மேலும், நாட்டுக்கு மிகமிக முக்கியமானது, அத்தியாவசியமானது எனும் திட்டம் என்றால் மட்டுமே கடலினுள் கட்டுமானம் மேற்கொள்ளலாம் என மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது" என்று மனுவில் கோரியிருந்தார்.

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x