Last Updated : 03 May, 2023 09:44 PM

 

Published : 03 May 2023 09:44 PM
Last Updated : 03 May 2023 09:44 PM

தமிழகத்தில் 2017-ல் இருந்து 649 யானைகள் உயிரிழப்பு; யானைகள் வழித்தடங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை!

கோவை சாடிவயலில் யானைகள் முகாம் அமைக்கப்படும் இடத்தை இன்று நேரில் பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உள்ளிட்டோர். படம்:ஜெ.மனோகரன்.

கோவை: யானைகள் வழித்தடங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனவும்,2017 முதல் தற்போதுவரை தமிழகத்தில் 649யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

கோவை வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று (மே 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் மதிவேந்தன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 85 முதல் 120 யானைகள் வரை உயிரிழக்கின்றன. சில வியாதிகள் காரணமாகவும் யானைகள் உயிரிழக்கின்றன. யானைகள் இறப்பது இயற்கைதான். அதை யாரும் தடுக்க முடியாது. யானைகள் மின்கம்பங்களில் தங்கள் உடலை உரசும்போது, அவை விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பதைத் தடுக்க வனத்துறை, மாவட்டநிர்வாகம், மின்வாரியம் இணைந்து 1,500 இடங்களில் மின்கம்பங்களில் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தாழ்வாக உள்ள மின்கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2017-ல் 125 யானைகள், 2018-ல் 84 யானைகள், 2019-ல் 108 யானைகள், 2020-ல் 110 யானைகள், 2021-ல் 96 யானைகள், 2022-ல் 106 யானைகள், 2023-ல் இதுவரை 20 யானைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை மிக அதிகமாக 2013-ல் 126 யானைகள் உயிரிழந்துள்ளன. மதுக்கரை வனச்சரகத்தில் போத்தனூர்-வாளையார் இடையிலான ரயில்வழித்தடத்தில் யானைகள் ரயில்மோதி உயிரிழப்பதைத் தவிர்க்க செயற்கை நுண்ணறிவு மூலமாக, யானைகள் நடமாட்டத்தை வனப்பணியாளர்கள், ரயில்வே நிர்வாகம் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எந்தெந்த விதமாக யானைகள் இறப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளோடு ஆலோசிக்கப்பட உள்ளது. இவைதான் யானைகள் வழித்தடங்கள் என இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதுகுறித்து தன்னார்வர்கள், அரசு இணைந்து ஆலோசித்து வருகிறோம். கோத்தகரி அருகே வனப்பகுதியில் சாலை அமைத்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சாடிவயலில் யானைகள் முகாம் அமைக்கப்படும் இடம், கோவை குற்றாலம் ஆகிய இடங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சேவாசிங், வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x